பா.ம.க. 31-வது ஆண்டு தொடக்கம்: கட்சி கொடி ஏற்றி சிறப்பாக கொண்டாட வேண்டும் தொண்டர்களுக்கு டாக்டர் ராமதாஸ் கடிதம்


பா.ம.க. 31-வது ஆண்டு தொடக்கம்: கட்சி கொடி ஏற்றி சிறப்பாக கொண்டாட வேண்டும் தொண்டர்களுக்கு டாக்டர் ராமதாஸ் கடிதம்
x
தினத்தந்தி 13 July 2019 8:30 PM GMT (Updated: 13 July 2019 7:58 PM GMT)

பா.ம.க. 31-வது ஆண்டு தொடக்க விழாவை கட்சி கொடி ஏற்றி கொண்டாட தொண்டர்களுக்கு டாக்டர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை, 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

பா.ம.க. தொடக்க விழா

பா.ம.க. வரும் 16-ந் தேதி 30 ஆண்டுகளை நிறைவு செய்து 31-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஆண்டுகள் 30 தான் என்றாலும் பா.ம.க. படைத்துள்ள சாதனை அத்தியாயங்கள் ஏராளமானவை. உயிரோட்டமுள்ள இயக்கம் என்பதற்கு உதாரணமாக திகழ்வது பா.ம.க. தான். அதற்கு பின்னணியும், முன்னணியுமாய் திகழ்பவர்கள் நீங்கள் தான்.

சென்னை கடற்கரை சீரணி அரங்கில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் கூடியிருந்த வரலாற்று நிகழ்வில் தொடங் கப்பட்ட பா.ம.க., அன்று முதல் தற்போது வரை ஏற்றுக்கொண்ட நிலைப்பாட்டுக்கு எதிராக எதையும் செய்ததில்லை. கடந்த 30 ஆண்டுகளில் மக்கள் பிரச்சினைக்காக பா.ம.க. எத்தனையோ போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்றிருக்கிறது. குறிப்பாக அரசியல் அழுத்தம் காரணமாகவும், சட்டப்போராட்டம் மூலமாகவும் தமிழகத்தில் 4000-க்கும் கூடுதலான மதுக்கடைகளை பா.ம.க. மூட வைத்தது. படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. அரசு அறிவித்திருப்பதற்கு பா.ம.க. தான் முதன்மை காரணமாகும்.

கொண்டாட வேண்டும்

இப்போதும் மக்களை பாதிக்கும் திட்டங்களுக்கு எதிராக போராடுவதில் பா.ம.க. தான் உண்மையான எதிர்க்கட்சியாக திகழ்கிறது. மக்களவைத் தேர்தலில் மகுடம் சூட முடியாத நிலையில், அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தல்களிலும், அதற்கடுத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் நமது அணி பிரம்மாண்டமான வெற்றிகளை குவிப்பது தான் நமது இலக்காக இருக்க வேண்டும். அந்த இலக்கை நோக்கி நாம் வேகமாகவும், விவேகமாகவும் பயணிப்பதன் தொடக்கமாக அமையும் வகையில், பா.ம.க. 31-வது ஆண்டு விழாவை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இதுவரை இல்லாத வகையில் சிறப்பாக கொண்டாட வேண்டும்.

கட்சியின் ஆண்டு விழாவையொட்டி அனைத்து கிராமங்களிலும், நகரம் மற்றும் பேரூர்களில் அனைத்து வட்டங்களிலும் கட்சி கொடி ஏற்றி, மக்களுக்கு இனிப்பு வழங்க வேண்டும். அத்துடன், வாய்ப்புள்ள இடங்களில் பொதுக்கூட்டம் நடத்தி, பா.ம.க.வின் சாதனைகளை மக்களுக்கு விளக்க வேண்டும். மொத்தத்தில் நமது வெற்றி இலக்கை எட்டுவதற்காக கடுமையாக உழைக்க நமது பா.ம.க. சொந்தங்கள் அனைவரும் கட்சி தொடக்க நாளில் உறுதியேற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

Next Story