காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட நிதி ஒதுக்க வேண்டும் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்


காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட நிதி ஒதுக்க வேண்டும் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 13 July 2019 8:10 PM GMT (Updated: 13 July 2019 8:10 PM GMT)

அ.தி.மு.க. ஆட்சி அமைந்தது முதற்கொண்டு பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுவதில் ஆர்வம் காட்டாமல் புறக்கணிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

சென்னை, 

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் கல்வித்துறையில் மிகப்பெரிய புரட்சி செய்த பெருந்தலைவர் காமராஜரை போற்றுகிற வகையில் தமிழக முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி, காமராஜர் பிறந்தநாளை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட வேண்டுமென்று மசோதாவை தாக்கல் செய்து சட்டமாக நிறைவேற்றினார்.

அ.தி.மு.க. ஆட்சி அமைந்தது முதற்கொண்டு பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுவதில் ஆர்வம் காட்டாமல் புறக்கணிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதற்கான நிதியும் ஒதுக்கப்படவில்லை. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பெருந்தலைவர் பிறந்ததின விழாவை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுவதற்கு அ.தி.மு.க. அரசுக்கு விருப்பம் இல்லாத காரணத்தால் இத்தகைய புறக்கணிப்பு நடவடிக்கை ஏற்பட்டு வருகிறது.

இத்தகைய போக்கை உடனடியாக நிறுத்தி, வருகிற 15-ந்தேதி (நாளை) பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுவதோடு, அதற்கான நிதியையும் ஒதுக்க வேண்டுமென தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். இந்த கோரிக்கை ஏற்கப்படவில்லையெனில் பெருந்தலைவர் காமராஜரின் புகழுக்கு அ.தி.மு.க. அரசு செய்கிற மிகப்பெரிய துரோகமாகவே கருதப்படும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Next Story