அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம் சென்னையை தொடர்ந்து 3 மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்..!


அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம் சென்னையை தொடர்ந்து 3 மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்..!
x
தினத்தந்தி 16 July 2019 10:48 AM GMT (Updated: 16 July 2019 10:48 AM GMT)

அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம் சென்னையை தொடர்ந்து 3 மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என அரசு கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னையில் செயல்படுத்தப்பட்டு வரும் அம்மா முழு உடல் பரிசோதனை மற்றும் அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை திட்டம் கோவை, மதுரை, நெல்லை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளதாக அரசு கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அரசு கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

முதன் முதலில் சென்னை அரசு பொது மருத்துவமனையில் கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் துவங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் இதுவரை 33 ஆயிரத்து 631 நபர்கள் முழு உடல் பரிசோதனை செய்து பயனடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம், ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. அங்கு இதுவரை 6 ஆயிரத்து 323 பேர் பயனடைந்துள்ளனர். இந்நிலையில் இந்த திட்டம் வரும் ஆண்டுகளில் கோவை, மதுரை, நெல்லை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.

தமிழக அரசால் கடந்த 2012ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் 36 லட்சத்து 83 ஆயிரத்து 597 பேர் பயனடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 5 ஆயிரத்து 838 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ள நிலையில், அரசு பொது மருத்துவமனைகளில் 15 லட்சத்து 34 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story