நீட் தேர்வு விவகாரம் : மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபின் வழக்கு தொடருவது குறித்து முடிவு- அமைச்சர் சிவி சண்முகம்


நீட் தேர்வு விவகாரம் : மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபின் வழக்கு தொடருவது குறித்து  முடிவு- அமைச்சர் சிவி சண்முகம்
x
தினத்தந்தி 17 July 2019 7:11 AM GMT (Updated: 17 July 2019 7:11 AM GMT)

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபின் வழக்கு தொடருவது குறித்து முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் சிவி சண்முகம் கூறினார்.

சென்னை

நீட் தேர்வு மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம் தொடர்பாக திமுக கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது  சட்டசபையில் மு.க.ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது;-

திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்களை 6 மாதத்திற்குள் சட்டமன்றத்தில் வைக்கப்பட வேண்டும் என்பதுதான் விதி  நீட் விவகாரத்தில் மீண்டும் சட்ட மசோதாக்களை நிறைவேற்றி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மீண்டும் 2 மசோதாக்களை நிறைவேற்றி, குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பீர்களா? என கேள்வி எழுப்பினார்.

நீட் தேர்வு  விலக்கு மசோதா தொடர்பாக  தமிழக  சட்டதுறை அமைச்சர் சிவி சண்முகம் விளக்கம் அளித்து பேசியதாவது:-

நீட் தேர்வு விவகாரத்தில்  தமிழக அரசு எந்த தகவலையும்  மறைக்கவில்லை. நீட் மசோதா தொடர்பான மத்திய அரசின் இமெயில் கடிதத்திலும், பிரமாண பத்திரத்திலும் ரிஜெக்ட் என்ற வார்த்தை இடம்பெறவில்லை. ரிட்டன் என்ற வார்த்தையே இடம்பெற்றிருந்தது. நீட் விலக்கு மசோதாக்களை திருப்பி அனுப்பியதற்கான காரணம் கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்.திருப்பி அனுப்பப்பட்டதற்கான காரணம் தெரிந்தால் தான்   அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராய முடியும்.   

 மசோதா நிராகரிக்கப்பட்டது ஏன் என்பது குறித்து விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தான் மத்திய அரசு பதில் அளித்துள்ளதே தவிர தமிழக அரசின் கடிதத்துக்கு பதில் அளிக்கவில்லை. 

நீட் தேர்வு மசோதா  தொடர்பாக விளக்கம் கேட்டு தமிழக அரசு  மத்திய அரசுக்கு 12 கடிதம் அனுப்பி உள்ளது. நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபின்  வழக்கு தொடருவது குறித்து  முடிவு எடுக்கப்படும் என கூறினார்.

முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது, 

நீட் தேர்வு வேண்டாம் என்பதில் அனைவரும் ஒருமித்த கருத்துடன் உள்ளோம்.  நீட் தேர்வுக்காக சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டவும் தமிழக அரசு  தயாராக உள்ளது. மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறோம் . ஏழை, எளிய மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று மத்திய அரசுக்கு தெரிவித்து வருகிறோம் என கூறினார்.

Next Story