7 பேர் விடுதலை தீர்மானத்தில் கையெழுத்திட கவர்னர் முடிவு எடுக்க உத்தரவிடக்கோரி நளினி மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி


7 பேர் விடுதலை தீர்மானத்தில் கையெழுத்திட கவர்னர் முடிவு எடுக்க உத்தரவிடக்கோரி நளினி மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி
x
தினத்தந்தி 18 July 2019 5:33 AM GMT (Updated: 18 July 2019 5:33 AM GMT)

7 பேர் விடுதலை தீர்மானத்தில் கையெழுத்திட கவர்னர் முடிவு எடுக்க உத்தரவிடக்கோரி நளினி மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

சென்னை

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்ற நளினி வேலூர் பெண்கள் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். அவருடைய கணவர் முருகன் ஆண்கள் சிறையில் உள்ளார். ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டனைபெற்று 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி, முருகன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய கவர்னர் நடவடிக்கை எடுக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழக கவர்னருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் இதுவரை 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்தநிலையில், நளினி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை  தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், இந்த தீர்மானத்தின் மீது இதுவரை கவர்னர் கையெழுத்திடவில்லை. எனவே, கையெழுத்திட கவர்னருக்கு முடிவு எடுக்க உத்தரவிடவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவிட்டு உள்ளது. அமைச்சரவை தீர்மானத்துக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என ஐகோர்ட் தெரிவித்து உள்ளது.

Next Story