அத்திவரதரை தரிசிக்க இன்று ஒரு நாள் மட்டும் உள்ளூர் மக்கள் வர வேண்டாம் - கலெக்டர் வேண்டுகோள்


அத்திவரதரை தரிசிக்க இன்று ஒரு நாள் மட்டும் உள்ளூர் மக்கள் வர வேண்டாம் - கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 18 July 2019 6:26 AM GMT (Updated: 18 July 2019 6:26 AM GMT)

அத்திவரதரை தரிசிக்க இன்று ஒரு நாள் மட்டும் உள்ளூர் மக்கள் வர வேண்டாம் என கலெக்டர் பொன்னையா வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

காஞ்சீபுரம்

18-வது நாளான இன்று அத்திவரதருக்கு கத்தரிப்பூ நிற பட்டால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நேற்று சந்திரகிரகணம் என்பதால் பெரும்பாலான மக்கள் தரிசனத்தை தவிர்த்துவிட்ட நிலையில் நேற்று கூட்டம் வரவில்லை.

இந்நிலையில் இன்று அத்திவரதரை தரிசிக்க அதிகாலை முதலே பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் திரண்டுள்ளனர். கோவில் உட்பிரகாரம், 4 மாட வீதிகள், செட்டித்தெரு, அண்ணா தெரு ஆகிய வீதிகளை கடந்து 5 கிலோமீட்டர் தூரத்துக்கு மேல் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் வரிசையில் காத்திருக்கின்றனர். 

தற்காலிகப் பேருந்து நிலையங்களில் இருந்து 30க்கும் அதிகமான பேருந்துகளில் மக்கள் கோவிலுக்கு அழைத்து வரப்படுகின்றனர். வெளியூர் வாகனங்களை ஊருக்குள் கொண்டுவர வேண்டாம் என்றும் தற்காலிக பேருந்து நிலையங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு மினி பேருந்துகளில் கோவிலுக்கு வருமாறும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஆனால் நள்ளிரவு நேரத்தில் வருபவர்கள் வாகனங்களை காந்தி சாலை, விளக்கொளி பெருமாள் கோவில் தெரு, டி.கே.நம்பி தெரு உள்ளிட்ட இடங்களில் நிறுத்திவிட்டுச் சென்று விடுவதால் கடும் போக்குவரது நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

காஞ்சீபுரம் - வாலாஜா சாலை ஓரத்திலும் தனியார் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் வெளியூர்களில் இருந்து வரும் பேருந்துகளும், செல்லும் பேருந்துகளும் இயங்க முடியாமல் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இன்று 2 லட்சம் பேர் தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 17 நாட்களில் 21 லட்சத்து 50 ஆயிரம் பேர் தரிசனம் செய்துள்ளனர்.

இந்த நிலையில் கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக மாவட்ட கலெக்டர் பொன்னையா வேண்டுகோள் ஒன்றை விடுத்து உள்ளார்.  அத்திவரதரை தரிசிக்க இன்று ஒரு நாள் மட்டும் உள்ளூர் மக்கள் வர வேண்டாம் என்று காஞ்சீபுரம் ஆட்சியர் வேண்டுகோள் விடுத்து உள்ளார். வெளியூரில் இருந்து காஞ்சீபுரம் வந்த கர்ப்பிணிகள், முதியவர்கள், குழந்தைகளும் அத்திவரதர் தரிசனத்திற்கு இன்று வரவேண்டாம் என கேட்டு கொண்டு உள்ளார்.

Next Story