திருச்செந்தூர் கோவிலுக்கு சென்ற போது ஓடைக்குள் வேன் கவிழ்ந்து 6 பேர் பலி 12 பேர் படுகாயம்


திருச்செந்தூர் கோவிலுக்கு சென்ற போது ஓடைக்குள் வேன் கவிழ்ந்து 6 பேர் பலி 12 பேர்  படுகாயம்
x
தினத்தந்தி 18 July 2019 9:00 PM GMT (Updated: 18 July 2019 8:37 PM GMT)

திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றபோது பாலத்தின் தடுப்பு சுவரில் வேன் மோதி, ஓடைக்குள் கவிழ்ந்ததில் 6 பேர் பலியானார்கள். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஸ்ரீவைகுண்டம்,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் பாண்டியன்நகர் 6-வது தெருவைச் சேர்ந்தவர் கருத்ததுரை. இவருடைய மகன் அருணாசலபாண்டி (வயது 35), கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவில் தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் ஒரு வேனில் திருச்செந்தூர் கோவிலுக்கு புறப்பட்டு சென்றார். அந்த வேனை அப்பகுதியைச் சேர்ந்த டிரைவர் முருகன் (35) ஓட்டிச்சென்றார்.

நேற்று அதிகாலை 1.20 மணி அளவில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளம் பஸ் நிறுத்தத்தை அடுத்த ஓடைப்பாலம் அருகில் வேன் சென்றது. அப்போது வேன் எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. சாலையின் இடதுபுற தடுப்பு கம்பியில் உரசியவாறு சென்ற வேன், பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி சுமார் 20 அடி ஆழ ஓடைக்குள் பாய்ந்து தலைக்குப்புற கவிழ்ந்தது.

இதில் வேனில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடியவாறு மரண ஓலமிட்டனர். ஓடைப்பாலம் முழுவதும் இருள் சூழ்ந்தும், முட்செடிகள் அடர்ந்து வளர்ந்தும் இருந்ததால், வேனில் சிக்கியவர்களால் உடனே வெளியே வர முடியவில்லை.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் சென்ற சிலர், ஓடைக்குள் வேன் கவிழ்ந்து கிடந்ததையும், அதில் சிக்கியவர்கள் மரண ஓலமிடுவதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள், இதுகுறித்து 108 ஆம்புலன்சுக்கும், செய்துங்கநல்லூர் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ஓடையில் இருந்த முட்செடிகளை அகற்றி, மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு நிலைய வீரர்களும் விரைந்து சென்று, வேனின் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். விபத்துக்குள்ளான வேன் அப்பளம் போன்று நொறுங்கி உருக்குலைந்து கிடந்தது.

வேனில் இருந்த அருணாசல பாண்டி, அவருடைய மகனான 3 மாத குழந்தை அனிஷ் பாண்டி, உறவினர்களான காசிராஜன் மனைவி பாக்கியலட்சுமி (46), ராமர் மனைவி முத்துலட்சுமி (65), கோபாலகிருஷ்ணன் மகன் நித்திஷ் (4), சுகுமாறன் மகன் ஜெகதீசுவரன் (12) ஆகிய 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் அருணாசலபாண்டி மனைவி கவுசல்யா (27), வைரம் மனைவி மல்லிகா (65), கோபாலகிருஷ்ணன் மகன் முகிலன் (5 மாதம்), செல்லையா மகன் சுகுமாறன் (40), அவருடைய மனைவி மாரீசுவரி (38), அவருடைய மகன் முருகேசன் (15), செந்தில்குமார் (30), அவருடைய மனைவி செண்பகலட்சுமி (28), அவருடைய மகள்கள் சுவேதா (8), விஷ்ணு, கோபால் மனைவி சூரியா (21), டிரைவர் முருகன் ஆகிய 12 பேரும் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர்.

அவர்கள் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இறந்தவர்களின் உடல்களைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுத சம்பவம் கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

இந்த விபத்து குறித்து செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story