மாநில செய்திகள்

‘சரவணபவன்’ ராஜகோபால் இறுதிச்சடங்கு இன்று சொந்த ஊரில் நடக்கிறது + "||" + Rajagopal funeral takes place today in his hometown

‘சரவணபவன்’ ராஜகோபால் இறுதிச்சடங்கு இன்று சொந்த ஊரில் நடக்கிறது

‘சரவணபவன்’ ராஜகோபால் இறுதிச்சடங்கு இன்று சொந்த ஊரில் நடக்கிறது
‘சரவணபவன்’ ஓட்டல் அதிபர் ராஜகோபால் உடலுக்கு இறுதிச்சடங்கு இன்று (சனிக்கிழமை) சொந்த ஊரில் நடக்கிறது.
சென்னை,

தமிழகத்தில் சைவ உணவுக்கான சாம்ராஜ்யத்தை சரவணபவன் என்ற பெயரில் உருவாக்கியவர் தொழில் அதிபர் ராஜகோபால். இவர் கடந்த 2001-ம் ஆண்டு நடந்த பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை தொடர்ந்து கடந்த 7-ந்தேதி அவரை சரணடையும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

உடல்நிலை சரியில்லாத காரணத்தால், கடந்த 8-ந்தேதி அவர் ஆஜரானார். இதைத்தொடர்ந்து அவருக்கு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர் சிகிச்சைக்காக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

பிரேத பரிசோதனை

பின்னர் அவரது உடல் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் நேற்று காலை 11 மணி அளவில் அவரது உடல் பொன்னேரி மாஜிஸ்திரேட்டு சதீஷ்குமார் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடந்தது. சுமார் 1 மணி நேரம் பிரேத பரிசோதனை நடைபெற்றது.

அதன்பின்னர் ராஜகோபால் உடல் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டு பதப்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து பொதுமக்கள் மரியாதை செலுத்துவதற்கு அவரது உடல் கே.கே.நகரில் உள்ள வீட்டில் நேற்று மதியம் வைக்கப்பட்டது.

அஞ்சலி

கே.கே.நகரில் வைக்கப்பட்டிருந்த ராஜகோபால் உடலுக்கு கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. எச்.வசந்தகுமார், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஜெ.அன்பழகன், தனசேகரன், பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன், வணிகர் சங்க தலைவர் வெள்ளையன், சென்னை முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்க தலைவர் சந்திரன் ஜெயபால், பனங்காட்டு படை கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அ.ஹரிநாடார், சென்னை நாடார் நலச்சங்க பொதுச் செயலாளர் டி.விஜயகுமார், திரைப்பட இயக்குனர் ஹரி உள்ளிட்டோர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதேபோல் அவரது உறவினர்கள், ‘சரவணபவன்’ ஓட்டல் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இறுதிச்சடங்கு

நேற்று இரவு ராஜகோபாலின் உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைத்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. கே.கே.நகர் வீட்டில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம், அசோக்நகரில் உள்ள அவரது வீட்டுக்கும், பின்னர் அங்குள்ள ‘சரவணபவன்’ ஓட்டல் கிளைக்கும் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

பின்னர் அங்கிருந்து அவரது உடல் ஆம்புலன்சுக்கு மாற்றப்பட்டு அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள புன்னைநகருக்கு கொண்டு செல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.