தொலைநோக்கு பார்வை கொண்ட பட்ஜெட் விவாத நிகழ்ச்சியில், ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி பாராட்டு


தொலைநோக்கு பார்வை கொண்ட பட்ஜெட் விவாத நிகழ்ச்சியில், ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி பாராட்டு
x
தினத்தந்தி 20 July 2019 11:00 PM GMT (Updated: 20 July 2019 8:40 PM GMT)

சென்னையில் நடந்த மத்திய பட்ஜெட் மீதான விவாத நிகழ்ச்சியில், ‘தொலைநோக்கு பார்வை கொண்ட பட்ஜெட்’ என்று ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி பாராட்டு தெரிவித்தார்.

சென்னை,

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்ட நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) மீதான கருத்து விவாத நிகழ்ச்சி, வி.ஐ.டி. பல்கலைக்கழகம் சார்பில் சென்னை ராயப்பேட்டை மியூசிக் அகாடமியில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன் தலைமை தாங்கினார்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.செம்மலை, தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், விடுதலை சிறுத்தைகள் துணை பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி, பா.ஜ.க. இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம், ம.தி.மு.க. இளைஞரணி செயலாளர் வி.ஈஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விவாத நிகழ்ச்சி நெறியாளராக ‘துக்ளக்’ பத்திரிகை ஆசிரியரும், பிரபல ஆடிட்டருமான எஸ்.குருமூர்த்தி பங்கேற்றார்.

இதில் வி.ஐ.டி. பல்கலைக்கழக மாணவ-மாணவிகளும் கலந்துகொண்டனர்.

முன்னுரிமை

இந்த விவாத நிகழ்ச்சியில் எஸ்.செம்மலை, வினோஜ் பி செல்வம் ஆகியோர் பட்ஜெட்டை வரவேற்று பேசினார்கள்.

திருச்சி சிவா எம்.பி., தா.பாண்டியன், கே.பாலகிருஷ்ணன், பீட்டர் அல்போன்ஸ், எஸ்.எஸ்.பாலாஜி, வி.ஈஸ்வரன் ஆகியோர் பட்ஜெட்டை விமர்சித்து கருத்துகளை முன்வைத்தனர். அப்போது ‘பட்ஜெட்டில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது, மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் எதுவும் இல்லை, மக்களுக்கு பயனளிக்கும் பட்ஜெட் அல்ல’ என்று அவர்கள் தெரிவித்தனர்.

அதனைத்தொடர்ந்து எஸ்.குருமூர்த்தி பேசியதாவது:-

பொருளாதார நுண்குழு தேவை

உலகமயமாக்கல் எனும் கொள்கை முன்னெடுக்கப்பட்ட பிறகு ‘ஸ்டாக் மார்க்கெட்டிங்’ எனும் பங்குசந்தையில் நமது மொத்த சேமிப்பில் 3 சதவீதம் மட்டுமே உள்ளடக்கப்படுகிறது. வெளிநாடுகள் முதலீடே இங்கு களைகட்டுகிறது. அதிக முதலீடு காரணமாக தாராளமாக கடன் வழங்கப்பட்டதில் வாராக்கடன் அதிகமானதே மிச்சம்.

எனவே அன்றாட பொருளாதார நகர்வுகளை உன்னிப்பாக பார்க்க வேண்டியது தலையாய கடமை ஆகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பிருந்த பொருளாதார கூறுகளையே இன்னும் முன்னெடுத்து பேசுகிறோம். எனவே ஒவ்வொரு கட்சியிலும் பொருளாதார நகர்வுகளை கவனிப்பதற்கென தனி நுண்குழுக்கள் அமைக்கப்பட்டால் நல்லது.

தொலைநோக்கு பார்வை

எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த பட்ஜெட்டில் சாதிகள், பிரிவுகள் அடிப்படையில் திட்டங்களோ, கொள்கைகளோ வரையறுக்கப்படவில்லை. எஸ்.சி. பிரிவில் இருந்தும் தொழில்முனைவோர் அதிகளவில் சாதித்துள்ளனர் என்பது கூட வளர்ச்சி காரணியாகவே உள்ளது. அந்தவகையில் சிறந்த பட்ஜெட் தான் இது.

துறைகள் அடிப்படையில் ‘இந்தளவு செய்தோம், இதனை இந்தளவு உயர்த்த இருக்கிறோம்’ என்று ஒதுக்கீட்டு தொகையுடன் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 5 ஆண்டுகளையும் உள்ளடக்கிய முழுமையான பட்ஜெட்டாகவே இருக்கிறது. அதேவேளை வரி விதித்தலில் சில குறைகளும் இருக்கத்தான் செய்கிறது. என்றாலும் ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட பட்ஜெட் தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அரசியல் கட்சி தலைவர்கள்-பிரதிநிதிகள் அனைவரும் புறநானூறு வரிகளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையை நிகழ்த்திய மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.

Next Story