தமிழகத்தில் இந்தி திணிப்பு என்பது தவறான குற்றச்சாட்டு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேட்டி


தமிழகத்தில் இந்தி திணிப்பு என்பது தவறான குற்றச்சாட்டு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேட்டி
x
தினத்தந்தி 20 July 2019 11:30 PM GMT (Updated: 20 July 2019 9:40 PM GMT)

தமிழகத்தில் இந்தி திணிப்பு என்பது தவறான குற்றச்சாட்டு என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.

சென்னை,

நகரத்தார் தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பில் நகரத்தார்களின் 4-வது சர்வதேச வர்த்தக மாநாடு சென்னை கிண்டியில் நேற்று தொடங்கியது. சங்க தலைவர் வெங்கட் அண்ணாமலை வரவேற்றார்.

மாநாட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-

தஞ்சாவூர் கோவில் போன்று தென்கிழக்கு ஆசியாவிலும் பல கோவில்கள் பிரமாண்டமாக உள்ளது. தென்கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளில் இருந்து வரும் கலாசாரங்கள், சின்னங்கள் நகரத்தார் மூலம் உருவாக்கப்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.

தமிழகத்தில், வட இந்தியர் ஆதிக்கம், இந்தி திணிப்பு என எவ்வளவு பேசினாலும், இந்தியா ஒன்று தான் என்பதை மறந்து விடக்கூடாது. இந்தியர்களிடம் அனைத்து வகையான திறமையும் உள்ளது. இதன்மூலம் அடுத்து வரும் தலைமுறையினருக்கு நாம் குருவாக இருக்க வேண்டும்.

சூட்கேஸ் எடுத்து செல்லாதது ஏன்?

நம் நாட்டில் கல்வி, அரசு உதவிகள் இல்லாத போதே நாம் வர்த்தக ரீதியாக முன்னிலையில் இருந்தோம். இயற்கையாகவே நம் மரபணுவில் அந்த திறன் இருக்கிறது. நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து தொழில் செய்வதன் மூலம் தான் நம் திறமைகளை அனைவருக்கும் தெரியும் வகையில் வெளிக்கொண்டு வர முடியும்.

பட்ஜெட் தாக்கல் செய்யும் போது சூட்கேஸ் எடுத்து செல்லாதது குறித்து மிகப்பெரிய செய்தியாக பேசப்பட்டது. சூட்கேஸ் என்றதும் வேறு நினைவு தான் எனக்கு வந்தது. சூட்கேஸ் கொடுத்து வாங்கும் முறை இந்த அரசிடம் இல்லை. நரேந்திர மோடி அரசு சூட்கேஸ் தூக்கும் அரசு இல்லை. அதனால் தான் சூட்கேஸ் எடுத்து செல்லவில்லை.

தொழில் நிறுவனங்கள் அரசுடன் இணைந்து இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்க முன் வரவேண்டும். இந்தியாவின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் தொழில் செய்வது மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதை ஊக்குவிக்க நரேந்திர மோடி அரசு எப்போதும் தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்தி திணிப்பு இல்லை

இதன்பின்பு அவர் நிருபர்களிடம் பேசும்போது, ‘தமிழகத்தில் இந்தி திணிப்பு என்பது தவறான குற்றச்சாட்டு. தமிழகத்தில் எங்கும், எதிலும் இந்தி திணிப்பு இல்லை. நரேந்திர மோடி அரசின் ’ஸ்ரேஷ்டபாரத்’ என்கிற நிகழ்ச்சி மூலம் வட மாநிலத்தில் தமிழ் கற்றுத்தரப்படுகிறது. ஜீரோ பட்ஜெட் விவசாயம் குறித்து, யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம். ஆனால் அதனை சிறப்பாக செயல் படுத்தி விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக மாற்றிய மாநிலங்களும் இங்கு உள்ளது’ என்றார்.

அப்போது தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உடன் இருந்தார்.

மீனவர்களுக்கு தனி இலாகா ஏற்படுத்தியதற்காகவும், பட்ஜெட்டில் மீனவர்களின் நலனுக்காக தேவையான நிதியை ஒதுக்கி பல்வேறு திட்டங்களை அறிவித்தமைக்காவும் தமிழக பா.ஜ.க. மீனவர் அணி தலைவர் சதீஷ், மத்திய நிதி மந்திரி நிர்மலாசீதாராமனுக்கு பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தார்.

Next Story