மாநில செய்திகள்

சிவில் சர்வீசஸ் தேர்வு: வீட்டில் இருந்தே தொலைக்காட்சி மூலம் படிக்கலாம் சைதை துரைசாமி தகவல் + "||" + Examination of Civil Services You can read through television Saidai Duraisamy Information

சிவில் சர்வீசஸ் தேர்வு: வீட்டில் இருந்தே தொலைக்காட்சி மூலம் படிக்கலாம் சைதை துரைசாமி தகவல்

சிவில் சர்வீசஸ் தேர்வு: வீட்டில் இருந்தே தொலைக்காட்சி மூலம் படிக்கலாம் சைதை துரைசாமி தகவல்
சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு வீட்டில் இருந்தபடியே தொலைக்காட்சி மூலம் படிக்கும் புதிய திட்டத்தை மனிதநேய மையம் தொடங்க உள்ளதாக அதன் தலைவர் சைதை துரைசாமி அறிவித்தார்.
சென்னை,

மனிதநேய மையத்தில் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்துள்ள மாணவ-மாணவி களுக்கு பயிற்சி வகுப்பு தொடக்க விழா சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சிக்கு மனிதநேய மையத்தின் தலைவர் சைதை துரைசாமி தலைமை தாங்கினார். பின்னர் அவர் மாணவ-மாணவிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி பேசியதாவது:-

ஜனநாயகத்தின் 4 தூண்கள் வலிமையாகவும், உண்மையாகவும் இருக்க வேண்டும். நாட்டின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் தான் மனிதநேய மைய அறக்கட்டளையை நான் தொடங்கினேன். மனிதநேய மையத்தில் படித்த 3 ஆயிரத்து 300 பேர் உயரிய பதவிகளில் இருக்கிறார்கள். 25 ஆயிரம் பேர் பல்வேறு அரசு பணிகளில் அமர்ந்து இருக்கிறார்கள்.

மனிதநேய மையத்தின் நோக்கம் சாதி, மதம் அற்ற மனிதநேயம் உள்ள மனிதர்களை இந்த சமுதாயத்தில் உருவாக்க வேண்டும் என்பது தான். எனவே சாதி, மதத்துக்கு எதிரான, அப்பழுக்கற்ற, தன்னலமற்ற, லஞ்சம், லாவண்யத்துக்கு அப்பாற்பட்ட அதிகாரிகளாக நீங்கள் இந்த சமூகத்தில் வர வேண்டும்.

‘சிவில் சர்வீசஸ்’ தேர்வுக்கு படிக்கிற மாணவர்களில் முதல் முயற்சியில் வெற்றி பெறுபவர்கள் எண்ணிக்கை மிக, மிக குறைவு ஆகும். எனவே எல்லோரும் சிறப்பான பயிற்சி பெற்று வெற்றியாளர்களாக வர வேண்டும் என்ற அக்கறையோடு மனிதநேய மையம் பெரும் பொருட்செலவில் புதிய திட்டத்தை ஆவணி மாதம் தொடங்க இருக்கிறது.

அதாவது, சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கு வகுப்புகளில் வந்து படிப்பதை போன்று வீட்டில் இருந்தவாறு தொலைக்காட்சி மூலம் ஒரு பைசா செலவு இல்லாமல் மாணவர்கள் படிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

முதல்நிலை தேர்வில் வெற்றி பெறும் வெற்றியாளர்களுக்கு, அதன்பின்னர் அனைத்து செலவுகளையும் மனிதநேய மையம் ஏற்றுக்கொள்ளும். போட்டி தேர்வுகள் பற்றி கிராமங்களில் உள்ள மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு வர வேண்டும் என்பது தான் மனிதநேய மையத்தின் நோக்கம் ஆகும்.

மாணவர்களாகிய நீங்கள் வகுப்புகளை கடந்து பொது அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். எனவே அன்றாடம் ஆங்கிலம், தமிழ் நாளிதழ்களை அவசியம் படிக்க வேண்டும். ஆரோக்கியம் மிக அவசியம் ஆகும். ஆரோக்கியம் இல்லா செல்வம், பதவி, புகழ் அனைத்தும் வீண் தான். கடின உழைப்பே உயர்வு தரும். தற்போது எனக்கு 65 வயது ஆகிறது. நான் தினமும் 19 மணி நேரம் உழைக்கிறேன். அன்றாடம் நேர மேலாண்மையை சரியாக கையாள்கிறவர்கள் வெற்றியாளர்களாக உருவாகுகிறார்கள்.

ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்று இந்தியாவின் கேபினட் செயலாளர் அந்தஸ்துக்கு வருவேன். இந்திய நாட்டுக்கு என்னால் முடிந்த நன்மையை செய்வேன் என்று நீங்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டு முயற்சி மேற்கொள்ள வேண்டும். நான் ஈட்டிய அனைத்து செல்வங்களையும் கொடுத்து இந்த மனிதநேய மைய அறக்கட்டளையை கடைசி வரை நடத்துவேன். இவ்வாறு சைதை துரைசாமி பேசினார்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பாணியில் சைதை துரைசாமி மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடினார். எம்.ஜி.ஆரின் தத்துவ பாடல்களையும், பாரதியாரின் தேச பக்தி பாடல்களையும் பாடி மாணவ-மாணவிகளை உற்சாகப்படுத்தினார். அவ்வப்போது பொது அறிவு கேள்விகளை எழுப்பி, அதற்கு சரியான பதில் அளித்த மாணவ-மாணவிகளுக்கு ரொக்க பரிசு வழங்கி பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் சுங்கத்துறை இணை கமிஷனர் சமயமுரளி, ஓய்வு பெற்ற போலீஸ் டி.ஜி.பி. அலெக்சாண்டர் உள்பட கல்வியாளர்கள் பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்கள்.