மாநில செய்திகள்

பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில் அத்திவரதர் சிலையை இடம் மாற்றுவது குறித்து ஆய்வு எடப்பாடி பழனிசாமி பேட்டி + "||" + The idol of the Athivaradhar Changing the location of the study Interview with Edappadi Palanisamy

பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில் அத்திவரதர் சிலையை இடம் மாற்றுவது குறித்து ஆய்வு எடப்பாடி பழனிசாமி பேட்டி

பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில் அத்திவரதர் சிலையை இடம் மாற்றுவது குறித்து ஆய்வு எடப்பாடி பழனிசாமி பேட்டி
பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில், காஞ்சீபுரத்தில் அத்திவரதர் சிலையை இடம் மாற்றம் செய்வது குறித்து ஆய்வு செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சேலம்,

சேலம் மாவட்டம் எடப்பாடியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- தமிழகத்தின் நிதி நிலைமை குறித்து ரூ.30 ஆயிரம் கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று துணை முதல்-அமைச்சர் சொல்லியிருக்கிறாரே?


பதில்:- சட்டமன்றத்திலே இதுகுறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு துணை முதல்-அமைச்சர் இருக்கின்ற நிதிநிலைமை பற்றி உரிய பதிலை தெளிவாக சொல்லியிருக்கிறார். மேலும், அரசின் நிலைமையை எடுத்து சொல்லியிருக்கின்றார்.

கேள்வி:- மத்திய அரசிடம் இருந்து நிதி ஆதாரத்தை பெறுவதற்கு என்ன நடவடிக்கை எடுத்திருக்கின்றீர்கள்?

பதில்:- நம்முடைய மாநில நிதி ஆதாரத்தை பெருக்கி நம்முடைய தேவையை நிவர்த்தி செய்து கொண்டிருக்கின்றோம். ஏற்கனவே, நம்முடைய நிதியை பெறுவதற்கு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி கொண்டிருக்கின்றோம்.

கேள்வி:- அணை பாதுகாப்பு மசோதா குறித்து என்ன நடவடிக்கை எடுத்து வருகிறீர்கள்?

பதில்:- அணை பாதுகாப்பு மசோதாவை நாடாளுமன்றத்தில் ஒரு முறை கொண்டு வந்தார்கள். அப்போது, அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து குரல் கொடுத்து அதை நிறைவேற்ற முடியாத சூழ்நிலையை உருவாக்கினார்கள். மீண்டும் கொண்டு வந்தால் நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையிலே எதிர்த்து குரல் கொடுப்பார்கள். கோணக்கடவு, முல்லைப் பெரியாறு என தமிழகத்துக்கான பல அணைகள் எல்லாம் கேரள மாநிலத்தில் இருக்கின்றன. இவற்றையெல்லாம் பராமரிக்க வேண்டுமானால், நம்முடைய அணைகளை நாம் பராமரிக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கி திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று கடந்த கூட்டத்தொடரிலேயே நாங்கள் கூறினோம். ஆனால் இதை கொண்டு வராத காரணத்தால் சட்டம் நிறைவேற்ற முடியவில்லை. தற்போது எந்த வடிவத்தில் கொண்டு வருவார்கள் என்று தெரியவில்லை. ஆகவே, நமக்கு பாதுகாப்பான சட்டத்தை கொண்டு வந்தால் நாம் ஏற்போம். நம்முடைய மாநிலத்திற்கு உகந்ததாக இல்லையென்றால் அதை எதிர்ப்போம்.

கேள்வி:- ராசிமணல் குறுக்கே அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பீர்களா?

பதில்:- ராசிமணலில் அணை கட்டும் விவகாரத்தை பொறுத்தவரையில் எந்தவித புதிய அணை கட்டுவதோ, தண்ணீரை தடுக்கவோ, நீரை மறுபக்கம் திருப்பி விடவோ கூடாது என ஏற்கனவே உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது. அதன் அடிப்படையில் தான் அனைத்து மாநிலங்களும் செயல்பட வேண்டும். அந்த தீர்ப்பு கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களாலும் பின்பற்றப்படவேண்டும்.

கேள்வி:- அத்திவரதர் சிலையை தரிசிக்க பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதை குறைக்க இடமாற்றம் செய்யப்படுமா?

பதில்:- அத்திவரதர் சிலையை இடமாற்றம் செய்வது குறித்து உயர் அதிகாரிகளின் கூட்டம் (நேற்று முன்தினம்) நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், தலைமை செயலாளர், துறை செயலாளர்கள், டி.ஜி.பி. ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தற்போது தரிசனம் செய்ய வருகின்ற பக்தர்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகளை ஆராய்ந்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு வேண்டிய முன்னேற்பாடுகள் செய்யப்படும். கோவில் குருக்களிடம் வேறு ஏதாவது இடத்தில் அத்திவரதர் சிலையை வைக்க முடியுமா? என்பது குறித்தும், பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் சிரமமின்றி தரிசனம் செய்வது குறித்தும் ஆய்வுகள் செய்யப்பட்டு வருகிறது.

கேள்வி:- கர்நாடகாவில் நடக்கும் அரசியல் நிலையைப் பற்றி ஒரு முதல்-அமைச்சராக நீங்கள் எப்படி பார்க்கின்றீர்கள்?

பதில்:- இது அந்த மாநில பிரச்சினை. அதில் நாம் தலையிடுவது சரியாக இருக்காது.

கேள்வி:- சேலம் உருக்காலையை தனியார் மயமாக்குவதற்கான ஏலம் அறிவித்திருக்கின்றார்களே?

பதில்:- மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா காலத்திலேயும், அதைத் தொடர்ந்து அவருடைய அரசும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றோம். சேலம் உருக்காலையை தனியார் மயமாக்க கூடாது என்று குரல் கொடுத்திருக்கின்றோம். தொடர்ந்து குரல் கொடுப்போம்.

கேள்வி:- உள்ளாட்சி தேர்தல் எப்போது நடக்கும்?

பதில்:- உள்ளாட்சி தேர்தல் தி.மு.க.வால் நிறுத்தப்பட்டது. எதற்காக நிறுத்தப்பட்டது என்ற வரலாறு உங்களுக்கே நன்றாக தெரியும். அதன்பிறகு, வார்டு வரையறை முடிவு பெற்றுவிட்டது. உச்சநீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் அறிவிப்பை அந்த அபிடவிட்டில் குறிப்பிட்டு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, அந்த குறிப்பிட்ட தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.