பார் உரிமையாளர்களிடம் லஞ்சம் வாங்கிய புகார் 7 போலீஸ் அதிகாரிகள் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு


பார் உரிமையாளர்களிடம் லஞ்சம் வாங்கிய புகார் 7 போலீஸ் அதிகாரிகள் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 21 July 2019 11:00 PM GMT (Updated: 21 July 2019 9:02 PM GMT)

பார் உரிமையாளர்களிடம் லஞ்சம் வாங்கிய புகாரின் அடிப் படையில் 7 போலீஸ் அதிகாரிகள் உள்பட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்கள் மீது இலாகாப்பூர்வ நடவடிக்கை பாய்கிறது.

சென்னை,

காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூரை சேர்ந்த டாஸ்மாக் பார் உரிமையாளர் நெல்லையப்பன் கடந்த மே மாதம் மாமல்லபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்வதற்கு முன்பு அவர் வீடியோ ஒன்றையும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வெளியிட்டு இருந்தார்.

அதில் அ.தி.மு.க. பிரமுகர் உள்பட சிலர் தன்னிடம் லஞ்சம் கேட்டு மிரட்டுவதாக குறிப்பிட்டு இருந்தார். மேலும் இதுதொடர்பாக மாமல்லபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு சுப்புராஜிடம் புகார் அளித்ததாகவும், அந்த புகாரின்மீது அவர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அதனால்தான் தற்கொலை முடிவுக்கு வந்ததாகவும் நெல்லையப்பன் வெளியிட்ட வீடியோவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. லஞ்ச ஒழிப்பு போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் நெல்லையப்பன் உள்பட பல்வேறு பார் உரிமையாளர்களிடம் போலீஸ் அதிகாரிகளும், டாஸ்மாக் அதிகாரிகளும் லஞ்ச பணவசூல் வேட்டையில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும் சட்டவிரோதமாக பார்கள் நடத்துவதற்கு போலீஸ் அதிகாரிகளும், டாஸ்மாக் அதிகாரிகளும் துணைபோனதும் கண்டறியப்பட்டது. லஞ்ச வேட்டையில் ஈடுபட்ட அதிகாரிகள் யார்? யார்? என்பது தொடர்பான பெயர் பட்டியலையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சேகரித்தனர்.

பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் 7 போலீஸ் அதிகாரிகள் உள்பட 10 பேர் மீது காஞ்சீபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் சிக்கிய அதிகாரிகள் பெயர் விவரம் வருமாறு:-

1. துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்புராஜ், (மாமல்லபுரத்தில் பணியாற்றியவர்)

2. இன்ஸ்பெக்டர் கண்ணன் (திருப்போரூர் முன்னாள் இன்ஸ்பெக்டர்)

3. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாணிக்கவேல் (காஞ்சீபுரம் மதுவிலக்கு பிரிவில் பணியாற்றியவர்)

4. துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் (மதுவிலக்கு பிரிவு காஞ்சீபுரம்)

5. இன்ஸ்பெக்டர் பாண்டி (கேளம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் பணி செய்தவர்)

6. இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி (மாமல்லபுரம் மதுவிலக்கு பிரிவில் பணிபுரிந்தவர்)

7. இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் (மதுராந்தகம் மதுவிலக்கு பிரிவில் பணி செய்தவர்)

8. அய்யாவு (காஞ்சீபுரம் மாவட்ட டாஸ்மாக் துணை மேலாளர்)

9. அகமதுல்லா (கலால்துறை முன்னாள் உதவி கமிஷனர், காஞ்சீபுரம்)

10. பாலகிருஷ்ணன் (கலால்துறை முன்னாள் உதவி கமிஷனர், காஞ்சீபுரம்)

வழக்கில் இவர்கள் 10 பேர் மீதும் கூட்டுசதி, நம்பிக்கை மோசடி மற்றும் ஊழல் தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவர்கள் காஞ்சீபுரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக பார்கள் நடத்துவதற்கு அனுமதித்ததோடு, குறிப்பிட்ட பார் உரிமையாளர்களிடம் இருந்து மாதந்தோறும் பெரிய அளவில் லஞ்சம் பெற்றுள்ளனர்.

இதனால் அரசுக்கு முறையாக வரவேண்டிய வருமானத்தில் இழப்பை ஏற்படுத்த இவர்கள் காரணமாக இருந்துள்ளனர் என்று வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் 106 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. செங்கல்பட்டு தாலுகாவில் 5 பார்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் அனுமதி இல்லாமல் முறைகேடாக பல்வேறு டாஸ்மாக் பார்கள் செயல்பட்டுள்ளது. மாமல்லபுரம், கேளம்பாக்கம், திருப்போரூர் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் செயல்படும் விடுதிகளிலும், ஓட்டல்களிலும் சட்ட விரோதமாக பார் நடத்துவதற்கும் மேற்கண்ட அதிகாரிகள் உறுதுணையாக இருந்ததோடு பெரிய அளவில் மாதந்தோறும் லஞ்சம் பெற்றுள்ளதாகவும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்புராஜ், இன்ஸ்பெக்டர் கண்ணன், இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் ஆகியோர் தற்கொலை செய்துகொண்ட பார் உரிமையாளர் நெல்லையப்பனிடம் பெரிய அளவில் மிரட்டி லஞ்சதொகை பெற்றுள்ளனர். இன்ஸ்பெக்டர் கண்ணன் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீடு ஒன்றை வாடகைக்கு பிடித்து தரும்படியும், அதற்கான முன்பணத்தை செலுத்தும்படியும், மாத வாடகையையும் கொடுக்கும்படி, தற்கொலை செய்துகொண்ட நெல்லையப்பனிடம் வற்புறுத்தி உள்ளார்.

மேற்கண்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட 10 அதிகாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி ரொக்கப்பணம், தங்க நகைகள் மற்றும் முக்கியமான ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.

தொடர்ந்து விசாரணை நடப்பதாகவும், விசாரணையின் முடிவில் மேற்கண்ட 10 அதிகாரிகள் மீதும் இலாகாப்பூர்வ நடவடிக்கை எடுக்க அரசுக்கு சிபாரிசு செய்யப்படும் என்றும், லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story