நாங்கள் மிட்டாய் கொடுத்து வெற்றிபெற்றோம் என்றால் தேனியில் நீங்கள் அல்வா கொடுத்து வெற்றி பெற்றீர்களா? அ.தி.மு.க.வுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி


நாங்கள் மிட்டாய் கொடுத்து வெற்றிபெற்றோம் என்றால் தேனியில் நீங்கள் அல்வா கொடுத்து வெற்றி பெற்றீர்களா? அ.தி.மு.க.வுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி
x
தினத்தந்தி 21 July 2019 11:30 PM GMT (Updated: 21 July 2019 9:12 PM GMT)

38 தொகுதிகளில் நாங்கள் மிட்டாய் கொடுத்து வெற்றி பெற்றோம் என்றால் தேனியில் நீங்கள் அல்வா கொடுத்து வெற்றி பெற்றீர்களா? என்று அ.தி.மு.க.வுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

தேனி,

தேனி அருகே உள்ள வீரபாண்டியில் மாற்றுக்கட்சிகளை சேர்ந்தவர்கள் தி.மு.க. வில் இணையும் விழா மற்றும் தி.மு.க. பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது. கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

சென்னையில் தங்க தமிழ்செல்வன் தி.மு.க.வில் இணைந்தார். அவரோடு சேர்ந்து இன்றைக்கு ஆயிரக்கணக்கில் இங்கே நீங்கள் எல்லாம் வந்து சேர்ந்து இருக்கிறீர்கள். வரவேண்டிய இடத்துக்கு தான் வந்திருக்கிறீர்கள். தங்க தமிழ்செல்வனை ரொம்ப நாளாகவே எப்படியாவது தூண்டில்போட்டு இழுத்துவிடலாம் என்று முயற்சியில் நாங்கள் ஈடுபட்டது உண்டு. அப்போது அவர் மாட்டவில்லை. ஆனால், இப்போது மாட்டிவிட்டார்.

நம்முடைய தாய் மொழியான தமிழ் மொழிக்கு எந்த சூழ்நிலையிலும் ஆபத்து வந்துவிடக் கூடாது. அதை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு நாம் வந்து இருக்கிறோம்.

ஜெயலலிதா மறைவு என்பது மர்மமான கேள்விக்குறியோடு இருக்கிறது. இதற்காக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த விசாரணை ஆணையத்தில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை விசாரிக்க வேண்டும் என்று 6 முறை சம்மன் அனுப்பி இருக்கிறார்கள். அதை ஏற்றுக்கொண்டு இதுவரை ஒருமுறை கூட ஆஜராகாதவர் தான் ஓ.பன்னீர்செல்வம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

வெறும் பதவிக்காக, பணத்துக்காக தலையாட்டி பொம்மையாக இருந்து கொண்டு இருக்கும் நிலையில் அ.தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் நடந்துகொண்டு இருக்கிறது. அ.தி.மு.க.வில் இன்றைக்கும் உழைத்துக்கொண்டு இருக்கும் உண்மை விசுவாசிகள், தொண்டர்கள் அங்கே இருப்பது நியாயமல்ல. உங்களின் இயக்கம் தாய்க்கழகமான தி.மு.க. தான். நான் இந்த கூட்டத்தின் மூலமாக அவர்களையும் அழைக்க விரும்புகிறேன்.

இந்த தேர்தலில் தி.மு.க. மக்களிடம் பொய்யான வாக்குறுதி தந்து, அதையும் தாண்டி மக்களை மிட்டாய் கொடுத்து ஏமாற்றி ஓட்டு வாங்கிவிட்டார்கள் என்று கூறுகிறார்கள்.

38 தொகுதிகளில் நாங்கள் மிட்டாய் கொடுத்து ஏமாற்றி வெற்றி பெற்றோம் என்றால், நீங்கள் ஒரு தொகுதியில் (தேனி) வெற்றி பெற்று இருக்கிறீர்களே. நீங்கள் அல்வா கொடுத்து வெற்றி பெற்றீர்களா? தமிழக மக்களை கொச்சைப்படுத்தும் வகையில் முதல்-அமைச்சர் பேசலாமா? தி.மு.க. முறையாக தேர்தலை சந்தித்து 234 தொகுதிகளில் குறைந்தபட்சம் 200 தொகுதிகளிலாவது வெற்றி பெற்று கம்பீரமாக ஆட்சி அமைக்கும். இன்றைக்கு இருக்கும் ஆட்சி இன்றைக்கா, நாளைக்கா என கோமா நிலையில் உள்ளது.

தமிழக மக்களுக்கு நாங்கள் கொடுத்து இருப்பது வாக்குறுதி. இன்று இல்லை என்றாலும் நாளை தி.மு.க. தானே ஆட்சிக்கு வரப்போகிறது. தேர்தல் நேரத்தில் தந்துள்ள அத்தனை உறுதிமொழிகளையும், மீண்டும் தேர்தல் நேரத்தில் தரப்போகும் அத்தனை வாக்குறுதிகளையும் நிறைவேற்றியே தீருவோம்.

தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது தான் மத்தியில் நீட் தேர்வு கொண்டுவர வேண்டும் என்று முடிவு எடுத்தார்கள். அதை நான் மறுக்கவில்லை. அப்போது குஜராத் முதல்-மந்திரியாக இருந்த மோடி அதை ஏற்கவில்லை. தமிழகத்தில் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது அதை ஏற்கவில்லை. உச்சநீதிமன்றம் வரை சென்று தடை உத்தரவு பெற்றார்.

ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தவரை கூட வரவில்லை. நான் அவரை விமர்சித்து இருந்தாலும், மத்திய அரசை கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டித்தவர் அவர். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையிலேயே நீட் தேர்வை தடுப்போம் என்று கூறி இருந்தார்கள். ஆனால், இன்றைக்கு தடுக்கவில்லையே?

பள்ளிக் கல்வியில் இந்தி கட்டாயம் இருக்க வேண்டும் என்ற முயற்சி எடுத்த நேரத்தில் அதை திரும்பப்பெற வைத்தது நம்முடைய எம்.பி.க்கள் தான். ரெயில்வே துறையில் இந்தியில் மட்டுமே பேச வேண்டும் என்ற ஒரு அறிவிப்பை அனுப்பிய ஒரு மணி நேரத்தில் அதை திரும்பப்பெற வைத்தோம் என்றால் அது தி.மு.க. எம்.பி.க்களால் தான்.

இதேபோல், தபால் துறையில் இனி தமிழிலும் தேர்வு எழுதலாம் என்ற உத்திரவாதத்தை பெற்று இருக்கும் கட்சி தான் தி.மு.க. அதுபோல் ஹைட்ரோ கார்பன் திட்டமாக இருந்தாலும், நியூட்ரினோ திட்டமாக இருந்தாலும் தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டு இருக்கிறோம். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

Next Story