சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான்-2 இன்று விண்ணில் பாய்கிறது நிலவின் தென் பகுதியில் இறங்கி ஆய்வு செய்யும்


சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான்-2 இன்று விண்ணில் பாய்கிறது நிலவின் தென் பகுதியில் இறங்கி ஆய்வு செய்யும்
x
தினத்தந்தி 22 July 2019 12:15 AM GMT (Updated: 21 July 2019 9:41 PM GMT)

தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதை தொடர்ந்து, சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான்-2 விண்கலம் இன்று மதியம் 2.43 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.

சென்னை,

சந்திரனை (நிலா) பற்றிய ஆராய்ச்சியில் அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் ஈடுபட்டு உள்ளன. அமெரிக்கா முதன் முதலில் சந்திரனுக்கு மனிதனை அனுப்பி சாதனை படைத்தது.

இந்தியாவும் சந்திரனை பற்றிய ஆராய்ச்சியில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளது. இந்தியா கடந்த 2008-ம் ஆண்டு சந்திரயான்-1 விண் கலத்தை நிலவுக்கு அனுப்பி ஆராய்ச்சி மேற்கொண்டதில், அங்கு தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

11 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் சந்திரயான்-2 விண்கலத்தை இந்தியா நிலவுக்கு அனுப்புகிறது. இந்த விண்கலத்தை ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் (ஆந்திரா) உள்ள ஏவுதளத்தில் இருந்து கடந்த 15-ந் தேதி விண்ணில் ஏவ இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு) திட்டமிட்டு இருந்தது. அதற் கான ஆயத்த பணிகளும் மும்முரமாக நடைபெற்று வந்தன.

ஆனால், ராக்கெட் ஏவப்படுவதற்கு 56 நிமிடங்களுக்கு முன்பு, அதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டதால், சந்திரயான்-2 விண்கல பயணம் நிறுத்திவைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து விஞ்ஞானிகள் ராக்கெட்டில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் அந்த பணியை வெற்றிகரமாக செய்து முடித்தனர். கோளாறு சரி செய்யப்பட்டதை தொடர்ந்து, விண்ணில் ஏவுவதற்கு ராக்கெட் தயார் நிலையில் உள்ளது. இனி தொழில்நுட்ப கோளாறு ஏற்பட வாய்ப்பில்லை என உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, சந்திரயான்-2 விண்கலம் இன்று (திங்கட் கிழமை) விண்ணில் ஏவப்படுகிறது.

இதற்கான 20 மணி நேர ‘கவுண்ட்டவுன்’ நேற்று மாலை 6.43 மணிக்கு தொடங்கியது. சரியாக இன்று மதியம் 2.43 மணிக்கு சந்திரயான்-2 விண்கலத்தை சுமந்தபடி ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் விண்ணில் பாய இருக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

பூமியில் இருந்து சந்திரன் 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இவ்வளவு தூரம் பயணிக்க சந்திரயான்-2 விண்கலம் 48 நாட்கள் எடுத்துக்கொள்ளும். சந்திரனின் தென்துருவ பகுதியில் சந்திரயான்-2 தரை இறங்கி ஆய்வு மேற்கொள்ளும்.

சந்திரனின் தென்துருவ பகுதியில் இதுவரை எந்த நாடும் ஆய்வு மேற்கொண்டதில்லை. அந்த வகையில் இந்தியா புதிய சாதனை படைக்க இருக்கிறது.

இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சிவன் நேற்று சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

‘சந்திரயான்-2’ விண்கலத்தை திங்கட்கிழமை (இன்று) மதியம் 2.43 மணிக்கு விண்ணில் ஏவ இஸ்ரோ முடிவு செய்து உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட ஆயத்த பணிகள் சிறப்பாக நடந்துகொண்டு இருக்கின்றன.

கடந்த 15-ந் தேதி ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டுவிட்டது. எல்லா பணிகளும் நிறைவடைந்து, விண்கலம் நல்லபடியாக உள்ளது. ஒத்திகையும் நல்லபடியாக நடந்து உள்ளது.

சந்திரயான் விண்ணில் ஏவப்பட்ட பிறகு 48 நாட்கள், 15 கட்டங்களாக அதன் சுற்றுப்பாதை உயர்த்தப்பட்டு சந்திரனை சுற்றி வருவதற்கான ஏற்பாடுகள் நடக்கும். அதன் பின்னர் சந்திரனின் தென் துருவ பகுதியில் சந்திரயான் இறங்கும்.

கடந்த முறை தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை கண்டுபிடித்ததும் கவுண்ட்டவுனை நிறுத்திவிட்டோம். அதன்பிறகு பலமுறை சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன. இதனால் மீண்டும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட வாய்ப்பு இல்லை.

‘சந்திரயான்-2’ தென் துருவ பகுதியில் இறங்குவதால் இந்தியாவுக்கு விஞ்ஞான ரீதியாக நிறைய தகவல்கள் கிடைக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளன. இதனால் உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் சந்திரயான்-2 விண்ணில் ஏவப்படுவதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story