தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை குற்றாலத்தில் களை கட்டும் சீசன் அனைத்து அருவிகளிலும் தண்ணீர்


தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை குற்றாலத்தில் களை கட்டும் சீசன் அனைத்து அருவிகளிலும் தண்ணீர்
x
தினத்தந்தி 22 July 2019 6:05 AM GMT (Updated: 22 July 2019 6:05 AM GMT)

குற்றாலத்தில் தற்போது சீசன் களைகட்டி வருகிறது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

சென்னை

கேரளாவில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ‘ரெட் அலர்ட்’ விடப்பட்டு உள்ளது. மலப்புரம், பாலக்காடு, திருச்சூர் மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் மஞ்சள் அலர்ட் விடப்பட்டு உள்ளது. பத்தனம் திட்டா, திருவனந்தபுரம், கொல்லம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் பச்சை அலர்ட் விடப்பட்டு உள்ளது.

காசர்கோடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டு உள்ளது. கண்ணூரில் 9.7 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. கனமழை காரணமாக கோழிக்கோடு, கண்ணூர், கோட்டயம் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது.

மேலும் 24 மணிநேரத்திற்கு கேரளாவில் கனமழை பெய்யும் என்றும், 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

குற்றாலத்தில் தற்போது சீசன் களைகட்டி வருகிறது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இந்நிலையில் காலை முதல் குற்றாலம் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருவதால் இதமான சூழல் நிலவி வருகிறது. இதனால் ஏராளமாக குவிந்து வரும் சுற்றுலா பயணிகள், மகிழ்ச்சியுடன் அருவிகளில் குளித்து செல்கின்றனர்.

Next Story