கஞ்சா புகைத்ததை போலீசில் கூறியதால் நடுரோட்டில் ஓட ஓட விரட்டி தாக்குதல்..!


கஞ்சா புகைத்ததை போலீசில் கூறியதால் நடுரோட்டில் ஓட ஓட விரட்டி தாக்குதல்..!
x
தினத்தந்தி 22 July 2019 9:25 AM GMT (Updated: 22 July 2019 9:25 AM GMT)

கஞ்சா புகைத்தது குறித்து போலீசில் புகார் அளித்தவரை சாலையில் ஓட ஓட விரட்டி தாக்கிய ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

சென்னை பூக்கடை என்.எஸ்.சி. போஸ் சாலை, பத்ரியன் தெரு சந்திப்பில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ அருகே முகமது சுல்தான் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி உள்ளார்.

அப்போது ஆட்டோவில் இருந்தவர்கள் வெளியே எச்சில் துப்பி உள்ளனர். அது முகமது சுல்தானின் காலிலும், பேண்ட்டிலும் பட்டதால், அவர் ஆட்டோவின் உள்ளே பார்த்துள்ளார். அப்போது ஆட்டோவில் இருந்தவர்கள் கஞ்சா புகைத்து கொண்டிருந்தாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்து காவலரிடம் முகமது சுல்தான் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து அங்கு வந்த  போக்குவரத்து காவலர் அவர்களை எச்சரித்துவிட்டு சென்றுள்ளார்.  இதனையடுத்து, தங்களை பற்றி போலீசிடம் புகார் அளித்த முகமது சுல்தானை, நெரிசலான சாலையில் ஓட ஓட விரட்டி அவர்கள் இருவரும் அடித்துவிட்டு ஆட்டோவில் அங்கிருந்து சென்றுள்ளனர்.

இந்த காட்சிகள் அந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், இதுகுறித்து முகமது சுல்தான் பூக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன்படி கொலை முயற்சி என வழக்கு பதிவு செய்த போலீசார், தாக்கியவர்களை அந்தபகுதியில் தேடி உள்ளனர். அப்போது அதே பகுதியில் ஆட்டோவை நிறுத்திவிட்டு நடைபாதையில் படுத்திருந்த அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அதில் அவர்கள் கண்ணகி நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராபர்ட் மற்றும் அவரது நண்பரான சென்ட்ரலை சேர்ந்த தீனா என்பது தெரியவந்தது.

Next Story