மழைநீர் வடிந்து விட்டதா? ஆய்வு செய்ய எங்களுடன் வர தயாரா? அதிகாரிகளுக்கு, ஐகோர்ட்டு நீதிபதிகள் அழைப்பு


மழைநீர் வடிந்து விட்டதா? ஆய்வு செய்ய எங்களுடன் வர தயாரா? அதிகாரிகளுக்கு, ஐகோர்ட்டு நீதிபதிகள் அழைப்பு
x
தினத்தந்தி 22 July 2019 11:00 PM GMT (Updated: 22 July 2019 9:58 PM GMT)

மழைநீர் முற்றிலுமாக வடிந்து விட்டதா? என்பதை ஆய்வு செய்ய எங்களுடன் காரில் வர தயாரா? என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் அழைப்பு விடுத்தனர்.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், சண்முகம் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “உலக வங்கியிடம் இருந்து ரூ.101 கோடியே 43 லட்சம் நிதியுதவி பெற்று ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டத்தை பெருநகர சென்னை மாநகராட்சி அமல்படுத்தி வருகிறது. இதில் மழைநீர் பூமிக்குள் இறங்குவதற்கு ஏதாவது, மழைநீர் வடிகால்களில் அடிப்பகுதியில் ‘கான்கீரீட்’ போட வேண்டாம் என்று உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகராட்சிக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். “சென்னை அண்ணாநகர், முகப்பேர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மழைநீர், கழிவு நீர் கூவம் ஆற்றில் விடப்படுகிறது. தமிழக அரசிடம் மழை நீரை சேமித்து வைக்க எந்த ஒரு திட்டமும் இல்லை” என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

பின்னர், “சென்னை மாநகரில் எத்தனை நீர் நிலைகள் உள்ளன?. அதில் சிலவற்றை ஏன் பூங்காக்களாக மாற்றப்பட்டுள்ளன?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அரசு தரப்பு வக்கீல், “சென்னையில் கோவில்களில் உள்ள குளங்களை சேர்த்து மொத்தம் 210 நீர்நிலைகள் உள்ளன. அதில் மக்கள் பயன்பாட்டுக்காக நீர்நிலைகளின் சுற்றுப்புறத்தில் மட்டும் பூங்கா அமைக்கப்பட்டுள்ளன” என்றார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், “சென்னையில் நேற்று (நேற்று முன்தினம்) பெய்த மழை நீர் முற்றிலும் வடிந்து விட்டதா? அதை நேரில் சென்று ஆய்வு செய்ய எங்களுடன் எங்களது காரில் வர மாநகராட்சி அதிகாரிகள் தயாரா?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

“அரசு திட்டங்களுக்காக பொதுப்பணித்துறை என்ஜினீயர்கள் வகுக்கும் செலவீன மதிப்பீட்டில் பல குளறுபடிகள் உள்ளது. மழைநீர் வடிகால் திட்டம் குறித்து ஆய்வு அறிக்கை தாக்கல் செய்ய வக்கீல் ஒருவரை சட்ட ஆணையராக ஏன் நியமிக்கக்கூடாது?” என்று கேள்வி கேட்ட நீதிபதிகள், “மழை நீர் வடிகாலுக்காக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து கூடுதல் விவரத்தை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை வருகிற 29-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Next Story