இறுதி பட்டியல் வெளியீடு வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் 28 பேர் போட்டி


இறுதி பட்டியல் வெளியீடு வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் 28 பேர் போட்டி
x
தினத்தந்தி 23 July 2019 12:00 AM GMT (Updated: 22 July 2019 10:47 PM GMT)

வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த தொகுதியில் 28 பேர் போட்டியிடுகின்றனர்.

வேலூர்,

தமிழகத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றது. இதில் வேலூர் தொகுதி தவிர அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. காட்பாடியில் ரூ.11 கோடி கைப்பற்றப்பட்டதை அடுத்து வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அடுத்த மாதம் 5-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டது. அதைத் தொடர்ந்து வேட்புமனு தாக்கல் கடந்த 11-ந் தேதி தொடங்கியது. கடந்த 18-ந் தேதி வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது.

இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக மொத்தம் 50 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 19-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சண்முகசுந்தரம் தலைமையில் நடந்தது. பரிசீலனை முடிவில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆகியோர் மனுக்கள் உள்பட 31 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. கூடுதல் மனுக்கள், மாற்று வேட்பாளர் மனுக்கள், குறைபாடு கண்டறியப்பட்ட மனுக்கள் என 19 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

வேட்புமனுக்கள் திரும்ப பெற கடைசி நாளான நேற்று சுயேச்சை வேட்பாளர்களான ஜே.அசேன், ஏ.ஜி.சண்முகம், தனலட்சுமி ஆகிய 3 பேர் தங்களது மனுக்களை ‘வாபஸ்’ பெற்றுக்கொண்டனர். அதைத் தொடர்ந்து 28 பேர் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியல் மாலையில் வெளியிடப்பட்டது.

அதன்படி களத்தில் உள்ள வேட்பாளர்கள் பெயர் விவரம் வருமாறு:-

1. ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக்கட்சி)- அ.தி.மு.க.

2. டி.எம். கதிர் ஆனந்த் - தி.மு.க.

3. தீபலட்சுமி- நாம் தமிழர் கட்சி.

4. ஜி.எஸ்.கணேசன்யாதவ்- பிரகதிஷில் சமாஜ்வாடி (லோகியா).

5. வி.சேகர்- ஆல்பென்ஷினர்ஸ் பார்ட்டி.

6. ச.திவ்யா- தேசிய மக்கள் கழகம்.

7. நரேஷ்குமார்- தமிழ்நாடு இளைஞர் கட்சி.

8. பேராயர் காட்பிரே நோபுள்- தேசிய மக்கள் சக்தி கட்சி.

9. மோகனம்-மறுமலர்ச்சி ஜனதா கட்சி.

10. விஜய் பவுல்ராஜா- ரிபப்ளிக்கன் சேனா.

மேலும் 18 சுயேச்சைகள் உள்பட மொத்தம் 28 பேர் போட்டியிடுகின்றனர்.

இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து வேலூர் நாடாளுமன்ற தேர்தல் சூடு பிடிக்கத்தொடங்கி உள்ளது.

Next Story