ரூட்டு தல யார்? கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல் -ஒரு மாணவருக்கு அரிவாள் வெட்டு


ரூட்டு தல யார்? கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல் -ஒரு  மாணவருக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 23 July 2019 12:21 PM GMT (Updated: 23 July 2019 1:25 PM GMT)

சென்னை அரும்பாக்கத்தில், மாநகரப் பேருந்தில் சென்ற பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பட்டாக் கத்திகளுடன் மோதிக் கொண்டதால் பதற்றம் நிலவியது.

சென்னை

பிராட்வேயில் இருந்து பூந்தமல்லி நோக்கி சென்ற மாநகரப் பேருந்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பலர் பயணித்தனர். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து அரும்பாக்கத்தை அடைந்த போது ரூட்டு தல தொடர்பாக மாணவர்களுக்குள் மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது ஒரு தரப்பினர், பேருந்தின் படிக்கட்டின் ஓரங்களில் மறைத்து வைத்திருந்த பட்டாக் கத்திகளை எடுத்துக் கொண்டு, மற்றொரு தரப்பை தாக்கத் தொடங்கினர். இதனால் பேருந்துக்குள் இருந்த பயணிகள் அலறினர். பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது. ஆயுதங்களுடன் இருந்த கும்பலைப் பார்த்து அஞ்சி மற்றொரு கும்பலைச் சேர்ந்தவர்கள் பேருந்தை விட்டு இறங்கி ஓட்டம் பிடித்தனர்.

அவர்களை விடாமல் துரத்திய அந்தக் கும்பல், விரட்டி விரட்டி பொதுமக்கள் முன்னிலையில் தாக்கியது. மேலும் பேருந்துக்குள் இருந்த எதிர்கும்பலைச் சேர்ந்த சிலரையும் அந்தக் கும்பல், தாக்கியதால் பயணிகள் பதற்றம் அடைந்தனர். ஆயுதங்களை ஏந்தியபடி சாலையில் அங்கும் இங்கும் நடமாடிய மாணவர்களால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

தகவல் அறிந்து போலீசார் செல்வதற்குள் பட்டாக்கத்திகளுடன் அந்த  மாணவர்கள் தப்பிச் சென்றனர். பேருந்தில் இருந்த சில மாணவர்களைப் பிடித்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே தாக்குதலில் வசந்த் என்ற இரண்டாம் ஆண்டு மாணவருக்கு பலத்த வெட்டுக் காயம் விழுந்தது.

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். பட்டப் பகலில், நட்ட நடுரோட்டில் பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இந்த அட்டூழியம் அப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது.



Next Story