போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது பெண் பரபரப்பு புகார்


போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது பெண் பரபரப்பு புகார்
x
தினத்தந்தி 23 July 2019 9:45 PM GMT (Updated: 23 July 2019 8:01 PM GMT)

நகை மற்றும் பணத்தை பறித்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுப்பதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது, பெண் ஒருவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.

திருப்பூர், 

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலை சேர்ந்தவர் மணிமொழி (வயது 54). இவர் தற்போது திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் மீது கர்நாடக மாநிலம் மாண்டியாவை அடுத்த கிருஷ்ணராயர்பேட்டை பகுதியை சேர்ந்த பிரதீமா என்கிற ராணி (32) என்பவர் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்த புகார் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திருமணம்

கடந்த 2014-ம் ஆண்டு திருச்சியில் எனது பெண் குழந்தையுடன் தங்கி வேலை பார்த்து வந்தேன். அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த மணிமொழி திருச்சியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் மூலமாக அறிமுகமானார். கடந்த 2014-ம் ஆண்டு முதல் கணவன் மனைவியாகவே வாழ்ந்து வருகிறோம்.

கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் எனக்கும் அவருக்கும் கிருஷ்ணராயர் பேட்டையில் வைத்து திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமணத்தை நாங்கள் பதிவு செய்யவில்லை.

மற்றொரு பெண்ணுடன் தொடர்பு

இந்த நிலையில் பெருமாநல்லூர் அருகே உள்ள இளம்பெண் ஒருவருடன் மணிமொழிக்கு தொடர்பு ஏற்பட்டது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அவர் என்னை அடித்து, உதைத்ததுடன் நகைகளை கொடுக்குமாறு கூறி கொலைமிரட்டல் விடுத்தார். மணிமொழி மற்றும் அவருடைய உறவினர்கள் எனது தாயாரிடம் இருந்து 46 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.46 ஆயிரத்தையும் பறித்துக்கொண்டனர். நகை, பணத்தை பறித்துக்கொண்டு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வரும் மணிமொழி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

விசாரணை

இந்த புகார் தொடர்பாக மாநகர போலீஸ் உதவி கமிஷனர் (பொறுப்பு) சுரேஷ், 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்தில் வைத்து இன்ஸ்பெக்டர் மணிமொழி மற்றும் பிரதீமா ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது பெண் ஒருவர் புகார் கொடுத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரதீமாவுக்கு ஏற்கனவே முதல் திருமணம் ஆன நிலையில் கணவரை விட்டு பிரிந்து மகளுடன் தனியாக வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புகார் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமொழி கூறியதாவது:-

பெண்ணுடன் பழக்கம்

நான் கடந்த 2015-ம் ஆண்டு கோவையில் பணியாற்றினேன். அப்போது குடும்பத்தோடு காரில் மேட்டுப்பாளையம் அருகில் உள்ள பிளாக் தண்டருக்கு சென்றோம். பின்னர் அதே காரில் கோவைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தோம். நாங்கள் வந்த கார் சிறுமுகை அருகே வந்தபோது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் எனது மனைவி உள்பட 7 பேர் இறந்தனர். என்னுடைய மகன் அபிஷேக் மட்டும் உயிர் தப்பினான். இதனால் நானும், எனது மகனும் கோவையில் வசித்து வந்தோம். அதன்பின்னர் 2016-ம் ஆண்டு என்னை திருச்சிக்கு இடமாற்றம் செய்தனர். அங்கு நான் பணியில் இருக்கும்போது வழக்கு ஒன்றில் ராஜேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

அவர்தான் பிரதிமா (32) என்ற பெண்ணை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். திருமணம் செய்து கொள்ளாமல் நாங்கள் சேர்ந்து குடும்பம் நடத்தியது உண்மைதான். இந்த நிலையில்தான் திருப்பூர் வீரபாண்டி போலீஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டேன். பின்னர் அந்த பெண்ணுடன், திருப்பூர் வீரபாண்டி பகுதிக்கு வீடு இடமாற்றம் செய்தேன்.

வாலிபர்களுடன் தொடர்பு

இந்த நிலையில் அந்த பெண், திருப்பூரில் பல்வேறு நிதி நிறுவன அதிபர்களை தொடர்பு கொண்டு பணம் வாங்கி செலவு செய்ததோடு, அவர்களின் மோட்டார் சைக்கிளில் சுற்றி வந்துள்ளார். இதை நான் பலமுறை கண்டித்தேன். இதற்கு முன்பே அந்த பெண்ணுக்கு திருச்சியில் 2 பேருடன் பழக்கம் இருந்துள்ளது.

இப்போதும் பல வாலிபர்களுடன் சுற்றி வருவதை நான் பார்த்து பலமுறை கண்டித்தேன். இதனால் அந்த பெண் கோபித்துக்கொண்டு தனது குழந்தையை அழைத்துக்கொண்டு உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார்.

நகை திருட்டு

இந்த நிலையில் கடந்த 8-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு நான் பணிக்கு வந்து விட்டேன். அப்போது அந்த பெண் என்னுடைய வீட்டிற்கு சென்று வீட்டில் இருந்த 55½ பவுன் நகை மற்றும் ஆவணங்களை அள்ளிச்சென்று விட்டார். இப்போது என்னிடம் ரூ.1 கோடியும், சொத்தில் பங்கும் கேட்கிறார். நான் கொடுக்க மறுத்ததால் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார்.

இவ்வாறு இன்ஸ்பெக்டர் மணிமொழி கூறினார்.

Next Story