ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் பிரமாண்ட பேரணி


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் பிரமாண்ட பேரணி
x
தினத்தந்தி 23 July 2019 10:00 PM GMT (Updated: 23 July 2019 8:05 PM GMT)

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் பிரமாண்ட பேரணி நடத்தினர்.

தஞ்சாவூர், 

காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் விவசாயிகள் பேரணி நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி தஞ்சையில் நேற்று பேரணி நடந்தது.

புதிய பஸ் நிலையம் அருகில் இருந்து புறப்பட்ட பேரணிக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் துரைமாணிக்கம், மாநில துணைத் தலைவர் ரவீந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். பேரணியில் 800 பெண்கள் உள்பட 2 ஆயிரம் பேர் பங்கேற்றனர். சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் இந்த பேரணி நடந்தது. இந்த பேரணியில் விவசாய சங்கங்கள் என 24 அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை பேரணி அடைந்ததும் அங்கு சாலையில் அமர்ந்து ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் முழக்கங்களை எழுப்பினர். பின்னர் கலெக்டர் அண்ணாதுரையை முக்கிய நிர்வாகிகள் சந்தித்து ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை மனுவினை வழங்கினர்.

மாணவ-மாணவிகள்

இதே கோரிக்கையை வலியுறுத்தி தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் அவர்கள் கல்லூரி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளுடன் பேராசிரியர்கள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி விட்டு வகுப்புகளுக்குள் சென்றனர்.

நாகை - திருவாரூர்

இதே போல் நாகை புதிய பஸ் நிலையம் அருகே அவுரித்திடலில் இருந்து தொடங்கிய பேரணி கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு நிறைவடைந்தது. அங்கு மனு அளித்தனர். இதில் விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

திருவாரூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பேரணி புறப்பட்டது. கலெக்டர் அலுவலகத்தில் பேரணி நிறைவடைந்தது. பேரணி முடிவில் மாவட்ட கலெக்டர் ஆனந்திடம், விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களிலும் விவசாயிகள் பேரணியாக கலெக்டர் அலுவலகம் சென்று மனு அளித்தனர்.

Next Story