அ.தி.மு.க.வின் எதிர்காலமே வேலூர் எம்.பி. தேர்தலில் தான் உள்ளது அமைச்சர் கே.சி.வீரமணி பரபரப்பு பேச்சு


அ.தி.மு.க.வின் எதிர்காலமே வேலூர் எம்.பி. தேர்தலில் தான் உள்ளது அமைச்சர் கே.சி.வீரமணி பரபரப்பு பேச்சு
x
தினத்தந்தி 23 July 2019 8:46 PM GMT (Updated: 23 July 2019 8:46 PM GMT)

‘கட்சியின் எதிர்காலமே வேலூர் எம்.பி. தேர்தலில் தான் உள்ளது’ என்று வேலூர் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. பணிக்குழு ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார்.

வேலூர், 

வேலூர் நாடாளுமன்ற தொகுதியின் அ.தி.மு.க. தேர்தல் பணிக்குழு ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:-

கடந்த தேர்தலை காட்டிலும் தற்போது கட்சியினரும், மக்களும் அதிக அளவில் அ.தி.மு.க.வுக்கு முழுமையான ஆதரவை தர உள்ளனர். ஆம்பூர், குடியாத்தம், வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிகளில் கடந்த முறை சிறுபான்மையினர் வாக்குகள் 50 சதவீதம் பெற்றிருந்தோம். இந்த முறை முழுமையான வாக்குகளை அளிப்பதாக அவர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர். செல்லும் இடங்களில் ஆதரவும் அளித்து வருகின்றனர். கிராமங்களில் ஒவ்வொரு பூத்களிலும் குறைந்தது 200 வாக்குகளாவது பெற்றாக வேண்டும்.

இந்த தேர்தலில் நமது கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வெற்றியில் தான் அ.தி.மு.க.வின் எதிர்காலமே உள்ளது. மானப்பிரச்சினையாகவும் தொண்டர்கள் உணர்ந்துள்ளனர். நாம் அனைவரும் தேர்தல் பணியில் ஈடுபட்டு ஏ.சி.சண்முகம் வெற்றிக்கு பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கட்சியை காக்கும் தேர்தல்

துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி. பேசுகையில், ‘முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா கூறுவார், எப்போதும் ஒரு கட்சி தோல்விக்கு பிறகு எழுச்சி பெறும் என்று. அந்த எழுச்சியை இந்த தேர்தலில் நிரூபித்து காட்டுவோம். இத்தேர்தலில் வெற்றி பெற்று எம்.ஜி.ஆர். உருவாக்கிய இக்கட்சியை, ஜெயலலிதா கட்டிக் காத்த இந்த கட்சியை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என்று நிரூபிக்க வேண்டும். இத்தேர்தல் மானத்தை காக்கும் தேர்தல். இதை மனதில் வைத்து கட்சியை காக்கும் தேர்தல் என்பதை நிரூபிக்க வேண்டும்’ என்றார்.

வேலூர் அ.தி.மு.க. கோட்டை

அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறுகையில், ‘வேலூர் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டை என நிரூபிக்கும் வகையில் இத்தேர்தல் அமையும். மக்களிடம் எங்களது சாதனைகளை எடுத்துச்சொல்லி வாக்கு சேகரிப்போம். ஆசை வார்த்தை காட்டி வாக்குகளை தி.மு.க. வாங்கியதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க உள்ளதாக கூறுகின்றனர். அ.தி.மு.க.வை பொறுத்தவரை இருமொழி கொள்கையை நடைமுறைப்படுத்துவோம். அதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்’ என்றார்.

Next Story