சென்னை, புறநகர் பகுதிகளில் பலத்த மழை பொதுமக்கள் மகிழ்ச்சி


சென்னை, புறநகர் பகுதிகளில் பலத்த மழை பொதுமக்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 23 July 2019 10:00 PM GMT (Updated: 23 July 2019 8:49 PM GMT)

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று கனமழை கொட்டியது. தண்ணீர் தட்டுப்பாட்டால் தவித்து வரும் சென்னைவாசிகளுக்கு இந்த மழை சற்று ஆறுதலை தந்துள்ளது.

சென்னை, 

தென்தமிழகத்தின் வளிமண்டலத்தில் நிலவி வந்த மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. மாநிலத்தின் ஒரு சில இடங்களில் நேற்றும் மழை கொட்டியது.

கடும் குடிநீர் பற்றாக்குறையால் தவித்து வரும் சென்னையில் கடந்த சில தினங்களாக ஓரளவு மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் பல இடங்களில் நேற்றும் மழை வெளுத்து வாங்கியது. எழும்பூர், வடபழனி, மடிப்பாக்கம், ராயப்பேட்டை, தேனாம்பேட்டை, தியாகராயநகர், வண்ணாரப்பேட்டை உள்பட பல பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்தது.

போக்குவரத்து நெரிசல்

வியாசர்பாடி, அண்ணாநகர், மயிலாப்பூர், போரூர், சேப்பாக்கம், கோயம்பேடு, சைதாப்பேட்டை, அண்ணாசாலை, அடையாறு உள்பட ஏராளமான பகுதிகளிலும் பரவலாக மழை கொட்டியது. இதனால் பெரும்பாலான இடங்களில் சாலைகளில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது.

தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இந்த மழையினால் சென்னையின் பல இடங்களில் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். சில முக்கியமான பகுதிகளில் போக்குவரத்து போலீசார் மழையில் நனைந்தபடி போக்குவரத்தை சரிசெய்தனர்.

இதேபோல் சென்னை புறநகரின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை கொட்டியது.

சென்னைவாசிகளுக்கு ஆறுதல்

தண்ணீர் தட்டுப்பாட்டால் தவித்து வரும் சென்னைவாசிகளுக்கு கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை சற்று ஆறுதலை தந்துள்ளது. தொடர்ந்து இதேபோல் மழை பெய்து தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க வேண்டும் என்பதே சென்னை மக்களின் வேண்டுதலாக அமைந்துள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

இந்த நிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதுதொடர்பாக அந்த மையத்தின் அதிகாரிகள் கூறியதாவது:-

தென் தமிழகத்தின் வளிமண்டலத்தில் நிலவி வந்த மேலடுக்கு சுழற்சி நகர்ந்து ஆந்திரா நோக்கி செல்கிறது. அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் (இன்று) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், அதற்கு அடுத்து வரும் 2 நாட்களுக்கு (நாளையும், நாளை மறுதினமும்) ஒரு சில இடங்களிலும் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யும்.

வருகிற 26-ந் தேதி (நாளை மறுதினம்) வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகிறது. இதனால் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. 26-ந்தேதிக்கு பிறகு காற்றின் தன்மையை பொறுத்து, தாழ்வு பகுதியின் நிலையை அறியமுடியும். சென்னையை பொறுத்தவரையில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மழைக்கான வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

வால்பாறையில் 4 செ.மீ

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் சின்னக்கலாறு 7 செ.மீ., தேவாலா 6 செ.மீ., வால்பாறை 4 செ.மீ., ஜி பஜார் 3 செ.மீ. மழையும், தாமரைப்பாக்கம், பொன்னேரி, ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு, நடுவட்டம், மாமல்லபுரம், காஞ்சீபுரம், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் தலா ஒரு செ.மீ. மழையும் பெய்துள்ளது.

Next Story