தொழில் அதிபர்கள் வீடு, அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிரடி சோதனை தமிழகம், ஆந்திராவில் 28 இடங்களில் நடந்தது

தமிழகம், ஆந்திராவில் இரும்பு கம்பி தயாரிப்பு நிறுவன தொழில் அதிபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை,
தமிழகம் மற்றும் ஆந்திராவில் ‘சக்தி ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்’ என்ற பெயரில் இரும்பு கம்பிகள் மற்றும் இரும்பு தளவாடங்கள் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் வருமானவரி ஏய்ப்பு செய்து வருவதாக வருமானவரித் துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
அதன் அடிப்படையில் தமிழகம், ஆந்திராவில் இந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் நேற்று ஒரே நேரத்தில் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
28 இடங்களில் சோதனை
சென்னை, சூளைமேட்டில் உள்ள நிறுவனத்தின் தலைமை அலுவலகம், சென்னையில் உள்ள இயக்குனர்கள் வீடுகள், காஞ்சீபுரத்தில் உள்ள தொழிற்சாலை உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடந்தது.
மொத்தம் 28 இடங்களில் நேற்று காலை முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் 28 குழுக்களாக பிரிந்து சோதனைகளில் ஈடுபட்டனர். சுமார் 420 அதிகாரிகள் சோதனையை நடத்தினார்கள். சோதனை நடைபெறும் இடங்களில் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
கைப்பற்றப்பட்ட பணம் எவ்வளவு?
இதுகுறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
வரி ஏய்ப்பு செய்து வருவதாக புகார்கள் வந்ததால் ‘சக்தி ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்’ நிறுவன அலுவலகம், வீடுகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. கணக்கில் காட்டப்படாத சொத்து ஆவணங்கள் உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. கைப்பற்றப்பட்ட சொத்துகளின் மதிப்பு எவ்வளவு? கைப்பற்றப்பட்ட ரொக்க பணம் எவ்வளவு? என்பது குறித்து தற்போது கூற இயலாது.
முழுமையான சோதனை முடிந்த பின்னரே அதனை ஆய்வு செய்து தெரிவிக்கப்படும். தேவைப்பட்டால் நாளையும்(அதாவது இன்று) இந்த நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
டெல்லியில் நேற்றுமுன்தினம் வருமான வரித்துறை அதிகாரிகள் மத்தியில் பேசிய மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், ‘வரிஏய்ப்பு செய்ய நினைக்கிறவர்களை விடாதீர்கள். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுங்கள்’ என கூறினார். அதற்கு மறுநாளே இந்த சோதனை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story