பரோலில் வந்துள்ள நளினி, போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டார்


பரோலில் வந்துள்ள நளினி, போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டார்
x
தினத்தந்தி 26 July 2019 10:00 PM GMT (Updated: 2019-07-27T02:50:49+05:30)

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், நளினி ஆகியோர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

வேலூர், 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், நளினி ஆகியோர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் இவர்களுக்கு ஹரித்திரா என்ற மகள் இருக்கிறார். இவர் லண்டனில் டாக்டருக்கு படித்துள்ளார்.

இவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்காக நளினிக்கு ஐகோர்ட்டு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து வேலூர் பெண்கள் சிறையில் இருந்து நேற்று முன்தினம் நளினி பரோலில் வெளியே வந்தார். அவர் சத்துவாச்சாரி ரங்காபுரம் புலவர் நகரில் உள்ள திராவிடர் இயக்க தமிழர் பேரவை இயக்கத்தை சேர்ந்த சிங்கராயர் என்பவருடைய வீட்டில் தங்கி உள்ளார். நளினி சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் தினமும் ஒரு முறை நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அவர் நேற்று சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்துக்கு கையெழுத்திட வந்தார். சுடிதார் அணிந்து வந்த நளினியை துப்பாக்கி ஏந்திய போலீசார் வேனில் அழைத்து வந்தனர். சரியாக 11.30 மணிக்கு போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அங்கு இன்ஸ்பெக்டர் அழகுராணி முன்னிலையில் கையெழுத்திட்டார். உடனே அங்கிருந்து மீண்டும் அவர் தங்கியிருக்கும் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார். மகள் திருமணத்திற்காக பரோலில் வந்துள்ளதால் நளினி மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார். பரோலில் வந்த முதல் நாளிலேயே அவர் தனது உறவுக்கார பெண்ணுடன் ‘செல்பி’ எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

Next Story