‘கால் பைக்’ தொழிலுக்கான ‘ரேபிடோ’ செயலியை முடக்கியதை எதிர்த்து வழக்கு ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு


‘கால் பைக்’ தொழிலுக்கான ‘ரேபிடோ’ செயலியை முடக்கியதை எதிர்த்து வழக்கு ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 26 July 2019 9:26 PM GMT (Updated: 26 July 2019 9:26 PM GMT)

‘கால் பைக்’ தொழிலுக் காக உருவாக்கப்பட்ட ‘ரேபிடோ’ செயலியை முடக்கம் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அரசின் கருத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

சென்னையில், ‘கால் டாக்சி’ போல ‘கால் பைக்’ என்ற சேவையை தெலுங்கானாவை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் தொடங்கியது. இதற்காக அந்த நிறுவனம் ‘ரேபிடோ’ என்ற செயலியை அறிமுகம் செய்தது. இதனை செல்போனில் பதிவிறக்கம் செய்து, வாடகைக்கு மோட்டார் சைக்கிளை பதிவு செய்தால், வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை ஓட்டிக் கொண்டு ஒருவர் வருவார். அதன் பின் இருக்கையில் அமர்ந்து, நாம் செல்ல வேண்டிய இடத்துக்கு செல்லாம்.

இந்த சேவையினால் ஆட்டோ, கால்டாக்சி டிரைவர்களின் வருமானத்துக்கு பாதிப்பு ஏற்பட்டதால், ‘கால் பைக்’ தொழிலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், தங்கவேல் என்ற டிரைவர் வழக்கு தொடர்ந்தார்.

செயலி முடக்கம்

இந்த வழக்கை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்தார். அப்போது, ‘கால் பைக்’ என்ற வாடகை முறையே சட்டவிரோதம். அதனால் ‘ரேபிடோ‘ செயலியை ‘பிளேஸ்டோரில்’ இருந்து நீக்கவும், அந்த செயலியை முடக்கவும் கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு கடந்த 6-ந்தேதி சென்னை போலீஸ் கமிஷனர் கடிதம் அனுப்பியுள்ளார்’ என்று தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ‘கால் பைக்’ முறைக்கு எந்த ஒரு விதிமுறைகளும் தமிழகத்தில் இல்லை. இதுதொடர்பாக ஒழுங்குமுறை விதிகளை உருவாக்கும் வரை, ‘ரேபிடோ’ செயலி மூலம் ‘கால்பைக்’ தொழிலை தமிழகத்தில் மேற்கொள்ளக்கூடாது. அதனால், இந்த செயலியை முடக்கி சென்னை போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவில் எந்த தவறும் இல்லை’ என்று உத்தரவிட்டார்.

புதுவித தொழில்

தனி நீதிபதியின் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில், தெலுங்கானாவை சேர்ந்த ரூபன் டிரான்ஸ்போர்ட் சர்வீஸ் என்ற நிறுவனம், மேல்முறையீடு செய்தது. அந்த மனுவில், ‘கால் பைக்’ முறை என்பது புதுவிதமான தொழில் முறையாகும். இதனால், போக்குவரத்து நெரிசல், எரிபொருள் பயன்பாடு குறையும். இந்த தொழில்முறை தமிழகத்தில் அமல்படுத்த விதிமுறைகளையும், சட்டத்திட்டங்களையும் உருவாக்கும்படி கடந்த ஜனவரி 9-ந்தேதி, பிப்ரவரி 27-ந்தேதி, ஏப்ரல் 8-ந்தேதி கோரிக்கை மனுக்களை கொடுத்தோம். இந்த கோரிக்கை மனு அரசின் பரிசீலனையில் உள்ளது.

இந்தநிலையில், போலீஸ் கமிஷனரின் உத்தரவின்படி, எங்கள் நிறுவனத்தின் ‘ரேபிடோ’ செயலியை கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் முடக்கம் செய்துள்ளது. இதனால், தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும் இந்த செயலி முடக்கப்பட்டுள்ளது.

தாக்குதல்

இதனால் அந்த மாநிலங்களில் இந்த தொழிலை மேற்கொள்ள முடியவில்லை. மேலும், கால் பைக்கை ஓட்டுபவர்களுக்கு எங்கள் நிறுவனத்தின் பெயரில் ‘டி.சர்ட்’ மற்றும் ‘ஹெல்மெட்’ வழங்கப்பட்டுள்ளது. இதை அணிந்து செல்லும் பைக் ஓட்டுனர்களை போக்குவரத்து போலீசார் அடித்து துன்புறுத்துகின்றனர். அவர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர். அதேபோல, ஓட்டுனர்களை கால்டாக்சி டிரைவர்கள் சங்கத்தினரும் தாக்குகின்றனர்.

எனவே, போலீசார் மற்றும் டிரைவர்கள் சங்கத்தினரின் இந்த செயலை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

பதில் அளிக்கவேண்டும்

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், ‘தனி நீதிபதியின் உத்தரவில் ‘ரேபிடோ‘ செயலி மற்ற மாநிலங்களில் செயல்படுவது தொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

ஆனால், ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் மற்ற மாநிலங்களிலும் எங்களது செயலியை செயல்பட முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளன. எனவே, தனி நீதிபதி உத்தரவில் திருத்தம் செய்து தமிழ்நாட்டிற்கு மட்டும் தடை பொருந்தும் என்று உத்தரவிட வேண்டும்’ என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘இந்த விவகாரத்தில் அரசு தரப்பின் விளக்கத்தை கேட்காமல் எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது’ என்று கூறினர். பின்னர், மனுவுக்கு சென்னை போலீஸ் கமிஷனர் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 1-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Next Story