குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் முன்பு விவசாயி விஷம் குடித்ததால் பரபரப்பு


குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் முன்பு விவசாயி விஷம் குடித்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 26 July 2019 9:36 PM GMT (Updated: 2019-07-27T03:06:12+05:30)

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் முன்பு விவசாயி ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலம், 

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ராமன் தலைமை தாங்கி விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் இந்த கூட்டத்தில் பேசினார்கள். சில விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தார்கள்.

விஷம் குடித்த விவசாயி

இதைத்தொடர்ந்து கூட்டத்தில், சூரமங்கலம் பகுதியை சேர்ந்த விவசாயி மாதேஸ்வரன் என்பவரை பேசுவதற்காக அதிகாரிகள் அழைத்தனர். அப்போது, அவர் கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனுவை அளித்தார். பின்னர் அவர் திடீரென தான் கையில் வைத்திருந்த விஷத்தை எடுத்து கலெக்டர் முன்பே குடித்து விட்டு, மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்தவர்கள் உடனடியாக விவசாயி மாதேஸ்வரனை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கலெக்டரிடம் அவர் கொடுத்த மனுவில், சிறு, குறு விவசாயிகளுக்காக உழவர்கள் உற்பத்தியாளர்கள் கம்பெனி என்ற குழுவை உருவாக்கினேன். அதில், ஏராளமான உறுப்பினர்கள் சேர்ந்தனர். உறுப்பினர்களுக்கு வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கப்பட்டது. ஆனால் கம்பெனியில் உள்ளவர்களில் சிலர், என்னை ஏமாற்றி பல லட்ச ரூபாய்களை மோசடி செய்துவிட்டார்கள். இதனால் தற்போது கடனாளியாக பரிதவித்து வருவதால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

போலீசார் விசாரணை

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியபோது, விவசாயி மாதேஸ்வரன் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதுபற்றி பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மனம் உடைந்த அவர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

Next Story