படைக்கல தொழிற்சாலைகளை கார்ப்பரேஷன்களாக மாற்றும் முடிவை கைவிட வேண்டும் மத்திய அரசுக்கு, மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்


படைக்கல தொழிற்சாலைகளை கார்ப்பரேஷன்களாக மாற்றும் முடிவை கைவிட வேண்டும் மத்திய அரசுக்கு, மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
x
தினத்தந்தி 26 July 2019 10:30 PM GMT (Updated: 2019-07-27T03:14:14+05:30)

படைக்கல தொழிற் சாலைகளை கார்ப்பரேஷன்களாக மாற்றும் முடிவை கைவிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு, மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை, 

இதுகுறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

படைக்கல தொழிற்சாலை

தமிழகத்தில் உள்ள 6 படைக்கல தொழிற்சாலைகள் உள்பட நாடு முழுவதும் உள்ள மொத்தம் 41 படைக்கல தொழிற்சாலைகளை கார்ப்பரேஷன்களாக மாற்றியமைத்து, தனியாரிடம் தாரை வார்க்கும் மத்திய பா.ஜ.க. அரசின் முயற்சிக்கு, தி.மு.க. சார்பில் கடும் எதிர்ப்பை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த தொழிற்சாலைகள் இந்திய ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும், போர் வாகனங்கள், கனரக பீரங்கிகள், இலகு ரக நடுத்தர துப்பாக்கிகள், வெடிபொருட்கள், பாராசூட் மற்றும் சிப்பாய்களுக்கான உடைகள் உள்ளிட்டவற்றை குறிப்பிட்ட தரத்துடன் தொடர்ந்து தயாரித்து வழங்கி, சிறப்புடன் செயல்பட்டு வருகின்றன.

41 படைக்கல தொழிற்சாலைகளிலும், 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகிறார்கள் என்பதோடு, அவை ரூ.20 ஆயிரம் கோடிக்கும் அதிகமான மதிப்பில் உபகரணங்களையும், உடைகளையும் உற்பத்தி செய்கின்றன. ஆனால் மத்திய அரசு அவ்வப்போது இந்த தொழிற்சாலைகளை தனியார் மயமாக்கும் முயற்சியில் ஈடுபடும்போதெல்லாம், திருச்சி படைக்கல தொழிலாளர் முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களும், கூட்டு நடவடிக்கை குழுக்களும் கடுமையாக எதிர்த்து வந்திருக்கின்றன.

வாக்குறுதிக்கு எதிரானது

முன்னாள் ராணுவ மந்திரிகள் மறைந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் மற்றும் மனோகர் பாரிக்கர் ஆகியோர் இந்த படைக்கல தொழிற்சாலைகள் தனியார் மயமாக்கப்படமாட்டாது என்று எழுத்துபூர்வமான உத்தரவாதங்களை நாடாளுமன்றத்தில் கொடுத்துள்ளார்கள். இது போன்ற சூழ்நிலையில் மீண்டும் இந்த 41 படைக்கல தொழிற்சாலைகளையும் கார்ப்பரேஷன்களாகவோ அல்லது வர்த்தக ரீதியிலான நிறுவனங்களாகவோ மாற்றி விட முயற்சிகளை மேற்கொண்டுள்ளது மத்திய மந்திரிகளே கொடுத்த வாக்குறுதிகளுக்கு முற்றிலும் எதிரானது.

தொடர்ந்து தனியார் மயத்தில் அதீத ஆர்வம் காட்டி வரும் மத்திய பா.ஜ.க. அரசு, படைக்கல தொழிற்சாலைகளையும் தனியாருக்கு தாரை வார்ப்பது நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் அபாயகரமான போக்கு என்பதையும், தமிழ்நாட்டிலும், நாடு முழுவதிலும் உள்ள 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களின் வேலைவாய்ப்புக்கும், இந்த தொழிற்சாலைகளை மறைமுகமாக நம்பியிருக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகவும், ஆபத்தாகவும் மாறி விடும் என்பதை மத்திய பா.ஜ.க. அரசு உணர வேண்டும்.

தொடர்ந்து செயல்பட நடவடிக்கை

ஆகவே படைக்கல தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் கோரிக்கைகளை பரிவுடன் பரிசீலித்து தமிழகத்திலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள 41 படைக்கல தொழிற்சாலைகளை கார்ப்பரேஷன்களாக மாற்றும் முடிவை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும். இந்த தொழிற்சாலைகளை மேம்படுத்த தேவையான நவீன சீர்திருத்தங்களை செய்ய தொழிலாளர்களும், ஊழியர்களும் தயாராக இருப்பதால் அவர்களுடன் கலந்து பேசி, நியாயமான சீர்திருத்தங்களை மேற்கொண்டு, 41 தொழிற்சாலைகளும் மத்திய அமைச்சகத்தின் நேரடி நிர்வாகத்தின் கீழ் தொடர்ந்து செயல்பட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story