அரசு கேபிள் டி.வி. கட்டணம் விரைவில் குறைக்கப்படும் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தகவல்


அரசு கேபிள் டி.வி. கட்டணம் விரைவில் குறைக்கப்படும் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தகவல்
x
தினத்தந்தி 26 July 2019 11:15 PM GMT (Updated: 2019-07-27T03:21:10+05:30)

அரசு கேபிள் டி.வி. கட்டண குறைப்பு குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் அறிவிப்பார் என்று அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கூறினார்.

சென்னை, 

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் தலைவராக, கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நேற்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார். சென்னை எழும்பூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தொலைக்காட்சி சேனல்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தன. தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை ஜெயலலிதா தொடங்கிய பிறகு பல்வேறு சேனல்கள் வந்து இருக்கிறது. கேபிள் டி.வி. ஒளிபரப்பில் கடுமையான போட்டி நிலவுகிறது.

தமிழகத்தில் 50-க்கும் மேற்பட்டோர் ‘டிஜிட்டல்’ லைசென்சு பெற்று தொழில் செய்து வருகிறார்கள். இந்த போட்டியை சமாளிப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து ஆய்வு செய்திருக்கிறோம்.

தரமான ஒளிபரப்பு

ஒளிபரப்பு தரமாக இருக்க வேண்டும். அனைத்து சேனல்களும் மக்களுக்கு குறைந்த விலையில் சென்றடைய வேண்டும். கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் நலன் காக்கப்பட வேண்டும். அரசு கேபிள் டி.வி. நிறுவனம் லாபகரமாக இயங்க வேண்டும். சந்தாதாரர்களாக இருக்கக்கூடிய மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் ஒளிபரப்பு வழங்க வேண்டும்.

இது தான் எங்களுடைய நோக்கம் ஆகும். இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், கேபிள் டி.வி. கட்டணம் விரைவில் குறைக்கப்படும். இது தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2 அல்லது 3 நாளில் அறிவிப்பு வெளியிட வாய்ப்பு இருக்கிறது.

விலையில்லா ‘செட்-டாப்’ பாக்ஸ்

தமிழ்நாடு கேபிள் டி.வி. நிறுவனம் ‘அனலாக்’ முறையில் ஒளிபரப்பு செய்யப்பட்டபோது, கடந்த 2017-ம் ஆண்டு 78 லட்சம் இணைப்புகள் இருந்தன. அதன்பிறகு டிஜிட்டலுக்கு மாறினோம். 35 லட்சம் ‘செட்-டாப்’ பாக்ஸ்கள் வாங்கினோம். இதில் 34 லட்சம் ‘செட்-டாப்’ பாக்ஸ்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன.

எங்களுக்கு மத்திய அரசிடம் ‘லைசென்சு’ கிடைப்பதில் காலதாமதம் ஆனதால், மற்ற அனுமதி பெற்ற நிறுவனங்கள் மக்களிடம் ‘செட்-டாப்’ பாக்சை கொண்டு சேர்த்துவிட்டார்கள். அதையெல்லாம் முறியடிக்கக் கூடிய வகையில் அரசு கேபிள் டி.வி. நிறுவனம் புத்துணர்ச்சி பெற்று அனைத்து பகுதிகளில் இருக்க கூடிய மக்களுக்கும் குறைந்த விலையில் கொண்டு போய் சேர்ப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

விலையில்லாமல் ‘செட்-டாப்’ பாக்ஸ் வழங்குவோம் என்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தார். அதில் மாற்றுக்கருத்து கிடையாது. இனிமேல் வருகிற ‘செப்-டாப்’ பாக்ஸ்கள் விலையில்லாமல் வழங்கப்படும்.

எச்சரிக்கை

‘நீங்கள் என்ன சொல்கிறீர்களோ? அதை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்’ என்று கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் என்னிடத்தில் உறுதி அளித்துள்ளார்கள். அனைவருமே அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் ‘செட்-டாப்’ பாக்ஸ்களை பெற்று மக்களுக்கு வழங்குவோம், முதல்-அமைச்சர் என்ன விலையை சொன்னாலும் ஏற்க தயார் என்று சொல்லி இருக்கிறார்கள்.

அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் ‘செட்-டாப்’ பாக்சை பயன்படுத்தி வரும் மக்களிடையே தவறான செய்திகளை பரப்பி ஒரு சில நிறுவனங்கள் அவர்களுடைய ‘செட்-டாப்’ பாக்ஸ்களை வினியோகம் செய்கிறார்கள். இது தமிழகம் முழுவதும் நடைபெற்று கொண்டிருக்கிறது. அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் ‘செட்-டாப்’ பாக்ஸ்களை யாரும் எடுக்கக்கூடாது. அப்படி எடுத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நான் எச்சரிக்கை விடுகிறேன்.

திட்டங்களுக்கு முன்னுரிமை

அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை நாடி மக்கள் ஓடி வருகிற காலத்தை இன்னும் 2 அல்லது 3 நாட்களில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உருவாக்குவார். அப்படி வரும்போது தமிழகம் முழுவதும் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் ‘செட்-டாப்’ பாக்ஸ்கள் தான் இருக்கும்.

செய்தி சேனல்களில் எங்களுக்கு எதிரான செய்தியை போடுவதை பற்றி முதல்- அமைச்சர் கவலைப்படுவது இல்லை. ஆனால் நாங்கள் செய்கிற திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். தமிழக அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மேலாண்மை இயக்குனர் பி.சங்கர் உடனிருந்தார்.

ஆலோசனை

முன்னதாக, அரசு கேபிள் டி.வி. கட்டணத்தை குறைப்பது தொடர்பாக மாவட்ட அளவிலான கேபிள் டி.பி. ஆபரேட்டர் குழு நிர்வாகிகள், தாசில்தார்கள், கட்டண சேனல்கள் உரிமையாளர்கள் ஆகியோருடன் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் அரசு கேபிள் டி.வி. கட்டண குறைப்பு தொடர்பாக சுமுக முடிவு எட்டப்பட்டதாக தெரிகிறது.

Next Story