மருத்துவக்கல்லூரிகளின் கட்டண நிர்ணய அதிகாரத்தை மாநில அரசுகளிடம் ஒப்படைக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


மருத்துவக்கல்லூரிகளின் கட்டண நிர்ணய அதிகாரத்தை மாநில அரசுகளிடம் ஒப்படைக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 26 July 2019 9:57 PM GMT (Updated: 2019-07-27T03:27:31+05:30)

மருத்துவக்கல்லூரிகளின் கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளிடமே ஒப்படைப்பதுடன், நீட் தேர்வும் ரத்து செய்யப்பட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மருத்துவக் கல்லூரிகள்

மருத்துவக்கல்வியை முறைப்படுத்துவதற்கான சட்டம் என்று கூறி நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விரைவில் நிறைவேற்றவிருக்கும் தேசிய மருத்துவ ஆணையச்சட்டத்தில் சமூக நீதிக்கு ஆபத்தான அம்சங்கள் ஏராளமாக இடம் பெற்றுள்ளன. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், மருத்துவப்படிப்புகள் முறைப்படுத்தப்படுவதற்கு பதிலாக ஒட்டுமொத்தமாக சீரழிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் நடைமுறைக்கு வந்தால், தமிழகத்திலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டணத்தை மாநில அரசால் நிர்ணயிக்க முடியாது. இனிவரும் காலங்களில் தனியார் கல்லூரிகளில் குறைந்தபட்ச கட்டணமே ரூ.25 லட்சம் என்ற அளவில் தான் இருக்கும் என்பதால் ஏழை-நடுத்தர மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்தாலும் அவர்களால் மருத்துவப் படிப்பை படிக்க முடியாது. மாறாக பணக்கார மாணவர்கள் நீட் தேர்வுகளில், இதுவரை எடுத்த மதிப்பெண்களை விட குறைந்த மதிப்பெண் எடுத்தாலும் பணத்தைக் கொட்டி மருத்துவம் படிக்க முடியும். இதுவா சீர்திருத்தம்.... இதுவா சமூகநீதி?.

கட்டண நிர்ணயம்

எனவே கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும் என்று தான் பா.ம.க. உள்ளிட்ட சமூகநீதிக் கட்சிகள் வலியுறுத்தின. அதை செய்யாமல் மாநில அரசுகளுக்கு இதுவரை இருந்த அதிகாரத்தையும் பறிப்பது என்ன நீதி?. மத்திய அரசு கொண்டு வந்த நீட் சட்டமாக இருந்தாலும், கட்டண நிர்ணய முறையாக இருந்தாலும் அவை ஏழை - நடுத்தர மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவை கலைப்பவையாகவே உள்ளன.

இந்தநிலையை மாற்ற மருத்துவக்கல்லூரிகளின் கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளிடமே ஒப்படைப்பதுடன், நீட் தேர்வும் ரத்து செய்யப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ள தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் அதற்கேற்ற திருத்தங்களை அரசு செய்ய வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Next Story