முன்னாள் பெண் மேயர் உள்பட 3 பேர் கொலை: “குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும்” கனிமொழி எம்.பி.


முன்னாள் பெண் மேயர் உள்பட 3 பேர் கொலை: “குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும்” கனிமொழி எம்.பி.
x
தினத்தந்தி 27 July 2019 10:30 PM GMT (Updated: 2019-07-28T00:25:02+05:30)

நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பெண் மேயர் உள்பட 3 பேரின் குடும்பத்தினருக்கு கனிமொழி எம்.பி. நேற்று நேரில் ஆறுதல் கூறினார்.

நெல்லை, 

நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பெண் மேயர் உள்பட 3 பேரின் குடும்பத்தினருக்கு கனிமொழி எம்.பி. நேற்று நேரில் ஆறுதல் கூறினார். அப்போது அவர், “குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும்“ என்று கூறினார்.

3 பேர் படுகொலை

நெல்லை மேலப்பாளையம் ரெட்டியார்பட்டி ரோடு அருகே உள்ள வீட்டில் வசித்து வந்த தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் பெண் மேயர் உமா மகேசுவரி, அவருடைய கணவர் முருகசங்கரன், வீட்டில் வேலை செய்து வந்த பணிப்பெண் மாரி ஆகிய 3 பேரும் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த கொடூர சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் வந்து ஆறுதல் கூறினர்.

கனிமொழி எம்.பி. ஆறுதல்

இந்த நிலையில் கனிமொழி எம்.பி. நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் உமா மகேசுவரியின் மகள் வீட்டுக்கு சென்றார். அங்கு அவர் உமா மகேசுவரியின் மகள்கள் கார்த்திகா, பிரியா மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த உமா மகேசுவரி, முருகசங்கரன் ஆகியோரது படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அமுதா பீட் நகரில் உள்ள பணிப்பெண் மாரியின் வீட்டுக்கு சென்றார். அங்கு அவருடைய 3 மகள்களையும், தாய் வசந்தாவையும் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

தண்டனை

முன்னாள் மேயர் உமா மகேசுவரி எல்லோரிடமும் அன்பாக பழகக்கூடியவர். தி.மு.க.வின் அனைத்து பணிகளிலும் அதிக ஈடுபாட்டுடன் கலந்து கொள்வார். அவர் இவ்வாறு கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளார் என்பதை அறிந்தபோது அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். இதற்கு தி.மு.க. தனது வருத்தத்தையும், கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

கொலையாளிகளை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது மிகவும் மோசமானது ஆகும். உமா மகேசுவரியின் வீட்டில் வேலை செய்து வந்த பணிப்பெண்ணையும் கொலை செய்துள்ளனர். இதனால் அவருடைய 3 பெண் குழந்தைகளும் தவித்து வருகின்றனர். இந்த கொலையின் பின்னணி என்னவென்று தெரியவில்லை. இந்த கொலையின் மூலம் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை எவ்வாறு இருக்கிறது என்பது தெரிகிறது. குற்றவாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பதை விரைவில் கண்டுபிடித்து அவர்களை கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story