ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் குதிக்கும் அரசு டாக்டர்கள்

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களில் அரசு டாக்டர்கள் ஈடுபட உள்ளனர்.
சென்னை,
அரசு டாக்டர்கள் கூட்டமைப்பு சங்கத்தின் அமைப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் நேற்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அரசு டாக்டர்கள் கூட்டமைப்பு சங்கம் சார்பில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் காலம் சார்ந்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசிடம் வலியுறுத்தினோம்.
எங்களது கோரிக்கைகளை அரசு ஏற்காததால், கடந்த சில நாட்களாக பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தினோம்.
ஆனால் எங்கள் கோரிக்கைகளுக்கு அரசு தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் வருகிற 29-ந்தேதி முதல் ஆகஸ்டு மாதம் 8-ந்தேதி வரை ஒத்துழையாமை இயக்கம் நடத்த முடிவு செய்து உள்ளோம். இந்த போராட்டத்தின் மூலம் மாதாந்திர ஆய்வு கூட்டம், சான்றிதழ் வழங்கும் பணிகள் உள்ளிட்ட மருத்துவ பணிகளை புறக்கணிக்க உள்ளோம்.
சாகும் வரை உண்ணாவிரதம்
மேலும் தமிழகத்தில் கடந்த 1 வருடத்திற்குள் 13-க்கும் மேற்பட்ட இளம் டாக்டர்கள் வேலைப்பளு காரணமாக மனஉளைச்சலில் தற்கொலை செய்துள்ளனர். எனவே, எங்கள் வேலைப்பளுவுக்கு ஏற்றவகையில் சம்பள உயர்வு அரசு வழங்க வேண்டும்.
அரசு இதை ஏற்காத பட்சத்தில், வரும் ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி அன்று தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும்.
மேலும் அரசு சார்பில் தீர்வு காணப்படவில்லை எனில், ஆகஸ்டு மாதம் 23-ந்தேதி சென்னையில் டாக்டர்கள் அனைவரும் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம்.
இதன் பின்னரும், அரசு எங்கள் கோரிக்கைகளை பரிசீலனை செய்யவில்லை என்றால் தொடர்ந்து ஆகஸ்டு மாதம் 27-ந்தேதி தமிழக முழுவதும் 1 நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்ய முடிவு எடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story