பணிமனை விபத்து: முதல் அமைச்சரிடம் கூடுதல் நிதிக்கு பரிந்துரை செய்யப்படும்; ராதாகிருஷ்ணன் பேட்டி


பணிமனை விபத்து:  முதல் அமைச்சரிடம் கூடுதல் நிதிக்கு பரிந்துரை செய்யப்படும்; ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 28 July 2019 5:46 AM GMT (Updated: 28 July 2019 5:46 AM GMT)

சென்னை வடபழனி பணிமனை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு கூடுதல் நிதி பெற்று தர முதல் அமைச்சரிடம் பரிந்துரை செய்யப்படும் என ராதாகிருஷ்ணன் பேட்டியில் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை வடபழனி மாநகர அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நேற்றிரவு பராமரிப்பு பணிகள் நடைபெற்றன.  இதில் பேருந்து ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து சுவரின் மீது மோதியது.  நள்ளிரவு ஒரு மணி அளவில் நடந்த இந்த விபத்தில் 7 ஊழியர்கள் சிக்கி கொண்டனர்.

அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  இதில், 2 ஊழியர்கள் வழியிலேயே உயிரிழந்து விட்டனர்.  மற்ற 5 பேருக்கும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து இன்று காலை முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.  பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கூறியதுடன், மரணமடைந்த ஊழியர்கள் குடும்பத்தினருக்கு நிவாரணம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.  பேருந்துகள் இயங்காத நிலையில் மக்கள் பாதிப்படைந்து உள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்களை சமரசப்படுத்தினார்.  இதன்பின் அவர், அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.  சென்னையிலுள்ள 32 போக்குவரத்து பணிமனைகளில் 16 பணிமனைகளை புதுப்பிக்க திட்டம் உள்ளது.  வடபழனி பேருந்து பணிமனையில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்தோருக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என செய்தியாளர்களிடம் கூறினார்.

வடபழனி பணிமனையில் விபத்து பற்றி முதல் அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று விபத்தில் இறந்த ஊழியர்களுக்கு, கூடுதல் நிதி பெற்று தர பரிந்துரை செய்யப்படும்.

தமிழக அரசு சார்பில் புதிய பேருந்துகள் வாங்கி வருகிறோம். இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்திருக்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

Next Story