அத்திவரதரை தரிசிக்க பிரதமர் மோடி 31–ந் தேதி காஞ்சீபுரம் வருகிறார்


அத்திவரதரை தரிசிக்க பிரதமர் மோடி 31–ந் தேதி காஞ்சீபுரம் வருகிறார்
x
தினத்தந்தி 29 July 2019 12:00 AM GMT (Updated: 28 July 2019 5:23 PM GMT)

அத்திவரதரை தரிசிக்க 31–ந்தேதி பிரதர் மோடி காஞ்சீபுரம் வருகை தருகிறார்.

காஞ்சீபுரம்

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த 1–ந்தேதி முதல் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து வருகின்றனர். பலமணி நேரம் காத்திருந்து பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்கின்றனர்.

அத்திவரதர் முதல் 24 நாட்கள் சயன கோலத்திலும் அதன் பின்னர் 24 நாட்கள் நின்ற கோலத்திலும் தரிசனம் தருவார் என்று முதலில் கோவில் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

 தற்போது அத்திவரதர் 31–ந்தேதி வரை சயன கோலத்திலும் அடுத்த மாதம் 1–ந்தேதி முதல் நின்ற கோலத்திலும் காட்சி தருவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி பிரதமர் நரேந்திரமோடி வருகிற 31–ந் தேதி காஞ்சீபுரம் வருகிறார். அவருடன் உள்துறை மந்திரி அமித்ஷா, நிதி மந்திரி நிர்மலாசீதாராமன் ஆகியோரும் வருகிறார்கள். அங்கு சயன கோலத்தில் காட்சி தரும் அத்திவரதரை தரிசித்து விட்டு மோடி ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு செல்கிறார்.

அன்றைய தினம் இரவு கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகள் தங்குகின்றனர். மறுநாள் ஆகஸ்டு 1–ந் தேதி நின்ற கோலத்தில் காட்சி தரும் அத்திவரதரை பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள் தரிசிக்கின்றனர்.

மோடி வருகைக்கான ஏற்பாடுகள் குறித்து பிரதமர் அலுவலக முதன்மைச் செயலாளர் சத்யபிரகாஷ் காஞ்சீபுரத்தில் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் அவர் மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவில், ஆதிவராக பெருமாள் கோவில்களில் சாமி தரிசனம் செய்தார்.

Next Story