கிராமப்புறத்தினர் பயன்பெறும் வகையில் புதிய கல்விக்கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது எச்.ராஜா பேட்டி


கிராமப்புறத்தினர் பயன்பெறும் வகையில் புதிய கல்விக்கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது எச்.ராஜா பேட்டி
x
தினத்தந்தி 28 July 2019 9:00 PM GMT (Updated: 2019-07-28T23:17:04+05:30)

கிராமப்புறத்தினர் பயன்பெறும் வகையில் புதிய கல்விக்கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது என்று திருப்பூரில் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறினார்.

திருப்பூர்

திருப்பூரில் நேற்று பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

தமிழகத்தில் நடந்து முடிந்த பொது தேர்தலில் தி.மு.க. கூட்டணி பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து வெற்றி பெற்றது. ஆனால் காங்கிரஸ், தி.மு.க. கட்சியால் ஆட்சிக்கு வர முடியாது. இது அவர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தையே தந்துள்ளது. இதனால் வேலூரில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும். கர்நாடக அரசியலில் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தால் தற்போதைய அரசின் ஸ்திரத்தன்மை எந்த நிலையிலும் பாதிக்கப்போவதில்லை.

எடியூரப்பா ஆட்சி அமைக்க நம்பிக்கை வாக்கெடுப்பில் கிடைக்கும் பெரும்பான்மையே போதுமானதாக இருக்கும். புதிய கல்விக்கொள்கை குறித்து பலர் உள்நோக்கத்துடன் பேசுகின்றனர். மலைவாழ் மக்கள், கிராம பகுதிகளில் உள்ளவர்கள் பயன்பெறும் வகையில் புதிய கல்விக்கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கல்வி கொள்கையில் முழுக்க முழுக்க கிராம மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

தீயசக்திகளின் கையாளாக... 

இதை எதிர்ப்பவர்கள் மலைவாழ் மக்கள், கிராம புறத்தை சேர்ந்தவர்கள் கல்வி அறிவு பெறுவதை எதிர்க்கிறார்கள் என்றே அர்த்தம். ஆண்டு தோறும் இந்த கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரிக்க உள்ளது. இவ்வாறு நல்லது எதை செய்தாலும், தமிழகத்தில் உள்ள ஒரு சில அரசியல்வாதிகள் அதை எதிர்க்க தான் செய்கிறார்கள். ராஜராஜ சோழன் குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் பேசுவதற்கு எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை.

எப்படியவது தமிழகத்தில் சாதிய மோதலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே அவர் அவ்வாறு பேசி வருகிறார். ஒருசில மதம் மாற்றும் தீயசக்திகளின் கையாளாக பா.ரஞ்சித் செயல்படுகிறார் என்ற சந்தேகம் தற்போது ஏற்படுகிறது. இது உள்நோக்கம் கொண்ட பொய். பா.ரஞ்சித் இயக்கும் படங்களை பொதுமக்கள் பார்க்காமல் புறக்கணித்து அவருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story