வடபழனி பணிமனையில் பயங்கரம் பஸ் மோதி சுவர் இடிந்தது; 2 பேர் பலி 6 பேர் காயம்


வடபழனி பணிமனையில் பயங்கரம் பஸ் மோதி சுவர் இடிந்தது; 2 பேர் பலி 6 பேர் காயம்
x
தினத்தந்தி 28 July 2019 11:00 PM GMT (Updated: 28 July 2019 7:25 PM GMT)

வடபழனி அரசு போக்குவரத்து பணிமனையில் பஸ் மோதி சுவர் இடிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர்.

பூந்தமல்லி, 

வடபழனி அரசு போக்குவரத்து பணிமனையில் பஸ் மோதி சுவர் இடிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும் 6 பேர் காயம் அடைந்தனர்.

அரசு பஸ் பணிமனை

சென்னை வடபழனியில் ஆற்காடு சாலையில் பஸ் நிலையம் உள்ளது. அதன் பின்புறம் அரசு போக்குவரத்து பணிமனையும் இயங்கி வருகிறது. இங்கிருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு தினந்தோறும் அரசு பஸ்கள் சென்று வருகிறது. இங்கு மொத்தம் 196 அரசு பஸ்கள் இயங்கி வருகிறது.

பணி நேரம் முடிந்த பிறகு அரசு பஸ்கள் அனைத்தும் பின்புறம் உள்ள பணிமனையில் நிறுத்தப்படும். பணிமனையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் அரசு பஸ்களை பராமரிக்கும் பணியில் அரசு போக்குவரத்து தொழில்நுட்ப ஊழியர்கள் ஈடுபட்டு வருவது வழக்கம். இவ்வாறு தினமும் சுழற்சி முறையில் 36 பஸ்கள் பராமரிப்பு செய்யப்படும்.

சுவர் இடிந்து விழுந்தது

நேற்று முன்தினம் நள்ளிரவு அரசு பஸ்களை பராமரிக்கும் பணியில் வழக்கம்போல் தொழில்நுட்ப ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். அப்போது பாலமுருகன் (வயது 38) என்ற டிரைவர் அரசு பஸ் ஒன்றை பழுதுபார்ப்பதற்காக ஓட்டி வந்தார். பஸ்களை பழுதுபார்க்க தனியாக மேடை போன்று உள்ள இடத்தில் பஸ்சை கொண்டு வந்து நிறுத்த முயன்றார்.

அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், திடீரென கீழே இருந்த தடுப்பையும் தாண்டி ஓடி, முன்புறம் இருந்த பஸ்களின் உதிரிப்பாகங்கள் வைக்கும் அறையின் சுவர் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் சுவர் இடிந்து விழுந்தது. சுவரில் மோதியதில் பஸ்சின் முன் பகுதி நொறுங்கியது.

2 பேர் பலி

உதிரிப்பாகங்கள் இருக்கும் அறையில் போக்குவரத்து ஊழியர்கள் சிலர் டீ குடித்துக்கொண்டு நின்றனர். அவர்கள் இடிந்து விழுந்த சுவருக்கு அடியில் சிக்கிக்கொண்டனர். இதை பார்த்த சக தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த தீயணைப்பு வீரர்கள், இடிந்து விழுந்த சுவருக்கு அடியில் சிக்கியவர்களை மீட்டனர். அதில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா, காட்டு சித்தாமூரை சேர்ந்த பாரதி (30), சாலிகிராமத்தைச் சேர்ந்த சேகர் (49) ஆகிய 2 பேரும் அதே இடத்தில் பரிதாபமாக இறந்துவிட்டனர்.

மேலும் மாசிலாமணி (48), தணிகைவேல் (40), யுவராஜ் (36), பட்டுசாமி (35), காலேசா உள்ளிட்டோர் தலை, கை, கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.

டிரைவர் கைது

இந்த விபத்தில் பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் பாலமுருகனுக்கும் காயம் ஏற்பட்டது. அவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். வடபழனி போலீசார், பலியான 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்துக்கு காரணமான டிரைவர் பாலமுருகனை போலீசார் கைது செய்தனர். அவர் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

ஆர்ப்பாட்டம்

முன்னதாக விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அதிகாலையில் வேலைக்கு வந்த அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் பஸ்களை எடுக்காமல் பணிமனையின் வெளியில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநகர போக்குவரத்து பணிமனைகளில் போதிய பாதுகாப்பு வசதி மற்றும் பஸ்களை பராமரிப்பதற்கு தேவையான உதிரிபாகங்கள் இல்லை என்றும், உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தமிழக அரசு அதிகபட்ச நிதி உதவி வழங்க வேண்டும் எனவும், காயமடைந்தவர்களுக்கும் நிவாரண உதவி அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

போக்குவரத்து துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் இளங்கோ ஆகியோர் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்களை சமாதானம் செய்து வைத்தனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்ட ஊழியர்கள் அதன்பிறகு வழக்கம்போல் பஸ்களை இயக்க தொடங்கினர். இதனால் 4 மணிநேரம் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இறந்து போன சக ஊழியர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் கருப்பு பட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

புதுமாப்பிள்ளை

இந்த விபத்தில் பலியான பாரதி மற்றும் சேகர் குடும்பத்தினருக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்களது குடும்பத்தினர் அலறி அடித்துக்கொண்டு பணிமனைக்கு வந்து 2 பேரின் உடல்களையும் பார்த்து கதறி அழுதனர்.

பலியான பாரதிக்கு கடந்த 4-ந் தேதிதான் நாகேஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த சில நாட்களிலேயே பாரதி வேலைக்கு வந்துவிட்டார். திருமணத்துக்கு பிறகு விடுமுறை கிடைக்காததால் பணிமனையிலேயே தங்கி வேலை செய்து வந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமைதான் விடுமுறையில் வீட்டுக்கு சென்ற பாரதி, நேற்று முன்தினம் இரவு பணிக்கு வருவதற்காக ஊரில் இருந்து பஸ்சில் வந்துள்ளார். பணிக்கு வந்த சில மணி நேரங்களிலேயே சுவர் இடிந்து விழுந்து அவர் பலியாகிவிட்டார். திருமணமாகி 24 நாட்களிலேயே கணவரை இழந்த பாரதியின் மனைவி நாகேஸ்வரிக்கு உறவினர்கள் ஆறுதல் கூறினர்.

வாக்குவாதம்

சம்பவம் நடந்த இடத்தை பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் படம்பிடிக்க போலீசாரும், போக்குவரத்து அதிகாரிகளும் அனுமதிக்கவில்லை. இதனால் போலீசார் மற்றும் போக்குவரத்து அதிகாரிகளுடன் பலியான ஊழியர்களின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பலியான 2 பேருக்கும் உரிய நிவாரணம்

விபத்து குறித்து போக்குவரத்து துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

வடபழனி போக்குவரத்து பணிமனையில் பஸ் மோதி சுவர் இடிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் பலியானார்கள். 6 பேர் காயம் அடைந்து உள்ளனர். அவர்கள் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இறந்தவர்களுக்கு போக்குவரத்து துறை சார்பில் உரிய நிவாரணம் வழங்கப்படும். இதுபற்றி முதல்- அமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்று முதல்- அமைச்சர் நிவாரண நிதியில் இருந்தும் உரிய நிவாரணம் கிடைக்க பரிந்துரை செய்யப்படும். காயமடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 322 பணிமனைகளில் 21 ஆயிரம் அரசு பஸ்கள் உள்ளன. இந்த பணிமனைகளில் பாதுகாப்பு தணிக்கை செய்யப்படும். பஸ்சில் பிரேக் பழுது இல்லை என்பதும், பஸ்சை ஓட்டிய டிரைவரும் நல்ல அனுபவம் வாய்ந்தவர் என்றுதான் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும் எங்கு தவறு நடந்தது? என்பது குறித்து விசாரித்து கண்டறியப்படும். தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆய்வுக்கு பிறகு முழுமையான தகவல் தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story