முன்னாள் மேயர் கொலையில் கைதான கார்த்திகேயனை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. முடிவு நகை-ஆவணங்கள் கோர்ட்டில் ஒப்படைப்பு


முன்னாள் மேயர் கொலையில் கைதான கார்த்திகேயனை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. முடிவு நகை-ஆவணங்கள் கோர்ட்டில் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 1 Aug 2019 3:30 AM IST (Updated: 1 Aug 2019 3:14 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை முன்னாள் பெண் மேயர் உள்பட 3 பேரை கொலை செய்த தி.மு.க. பெண் பிரமுகரின் மகன் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.

நெல்லை,

நெல்லை முன்னாள் பெண் மேயர் உள்பட 3 பேரை கொலை செய்த தி.மு.க. பெண் பிரமுகரின் மகன் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.

முன்னாள் மேயர் உள்பட 3 பேர் கொலை

நெல்லை மாநகராட்சி முதல் மேயர் உமா மகேசுவரி. இவரும், அவருடைய கணவர் முருகசங்கரன், பணிப்பெண் மாரி ஆகியோரும் கடந்த 23-ந் தேதி நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரி எதிரே ரோஸ்நகரில் உள்ள தங்களது வீட்டில் கொடூரமாக குத்திக்கொலை செய்யப்பட்டனர். அப்போது அவர்கள் அணிந்திருந்த 21 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுகுறித்து மேலப்பாளையம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தி.மு.க. பிரமுகர் மகன் கைது

விசாரணையில் முன்னாள் மேயர் உமா மகேசுவரிக்கும், தி.மு.க. பெண் பிரமுகர் சீனியம்மாளுக்கும் அரசியல் ரீதியாக முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. இதை உறுதிபடுத்தும் வகையில் கண்காணிப்பு கேமராவில் சீனியம்மாள் மகன் கார்த்திகேயன் (வயது 33) உருவமும், அவர் பயன்படுத்திய காரும் பதிவாகி இருந்தது. இவற்றை கொண்டு மேற்கொண்ட விசாரணையில், உமாமகேசுவரி உள்ளிட்ட 3 பேரையும் கார்த்திகேயன்தான் கொலை செய்தார் என்பது தெரியவந்தது.

உடனே போலீசார், அவரை கைது செய்து தடயங்களை சேகரித்தனர். கொலை நடந்த உமா மகேசுவரியின் வீடு, சாந்திநகரில் உள்ள கார்த்திகேயன் வீடு ஆகிய இடங்களுக்கு அவரை அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். கைரேகைகள், ரத்தகறை படிந்த துணிகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. கொலைக்கு பயன்படுத்திய 2 கத்திகள் கக்கன்நகர் பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டன. மேலும், பாளையங்கோட்டை சாந்திநகரில் உள்ள கார்த்திகேயன் வீட்டில் இருந்து 21 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.

சிறையில் அடைப்பு

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு கார்த்திகேயனுக்கு நெல்லை அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. நள்ளிரவில் அவர் நெல்லை 5-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நிஷாந்தினி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த அவர், கார்த்திகேயனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார். இதையடுத்து அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் கார்த்திகேயனிடம் இருந்து மீட்கப்பட்ட 21 பவுன் நகை மற்றும் 45 பக்க ஆவணங்களை போலீசார் நெல்லை 5-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஒப்படைத்தனர். நேற்று உமா மகேசுவரி வீட்டுக்கு அருகே வசித்து வரும் ஓய்வுபெற்ற நீதிபதி, பால்காரர், அந்த பகுதியில் கூழ் வியாபாரம் செய்து வரும் ஒரு பெண் மற்றும் உறவினர்களிடம் சாட்சியம் வாங்கப்பட்டு பதிவு செய்யப்பட்டன. இவர்களின் சாட்சியங்களும் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படுகிறது.

சி.பி.சி.ஐ.டி. விசாரணை

இதற்கிடையே, 3 பேர் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றி கடந்த 29-ந் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார், இன்ஸ்பெக்டர் பிறைசந்திரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் நெல்லை வந்தனர். அவர்களும் விசாரணையை தொடங்கினர். உமா மகேசுவரி வீட்டுக்கு சென்று ஒவ்வொரு அறையாக ஆய்வு செய்தனர்.

இந்த வழக்கு ஆவணங்களை நெல்லை மாநகர போலீசார், நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. சாட்சியங்கள் பதிவு செய்ய காலதாமதம் ஆனதால் இன்று (வியாழக்கிழமை) நெல்லை மாநகர போலீசார், சி.பி.சி.ஐ.டி.யிடம் ஆவணங்களை ஒப்படைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

மேலும், மதுரையில் இருந்த கார்த்திகேயனின் தாயாரான தி.மு.க. பெண் பிரமுகர் சீனியம்மாளுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு செய்துள்ளனர். மேலும் அவர்கள், சிறையில் அடைக்கப்பட்ட கார்த்திகேயனை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து இருக்கிறார்கள். அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? அல்லது வேறு யாராவது இந்த கொலைக்கு உடந்தையாக இருந்தார்களா? என்ற கோணத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

Next Story