கஜா புயல்; தற்காலிக வீடுகளை போர்க்கால அடிப்படையில் வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
கஜா புயலால் பாதிப்படைந்தோருக்கு தற்காலிக வீடுகளை போர்க்கால அடிப்படையில் வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
சென்னை,
தமிழகத்தில் நாகை, வேதாரண்யம் இடையே கடந்த வருடம் நவம்பர் மாதம் 16ந்தேதி கஜா புயல் கரையை கடந்தது. இந்த புயலால் டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, நாகை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
கஜா புயலின் தாக்குதலால் பல லட்சம் தென்னை, பலா மற்றும் பழமையான மரங்கள் வேரோடு சாய்ந்தன. வாழை, கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்களும் நாசமாகின. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. மேலும் மின்மாற்றிகள், துணை மின் நிலையங்களிலும் பெரும் சேதம் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடு மற்றும் உடைமைகளை இழந்துள்ளனர்.
இந்நிலையில், கஜா புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 2.65 லட்சம் வீடுகள் கட்டி கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து நீதிபதிகள், மீண்டும் புயல், பருவமழை வருவதற்குள் அரசு விரைந்து வீடுகளை கட்டித்தர வேண்டும். தற்காலிக வீடுகளை போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.
Related Tags :
Next Story