கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் அரசின் உத்தரவு சரியா? தவறா? என்று விவாதிக்க முடியாது ஐகோர்ட்டில், அட்வகேட் ஜெனரல் வாதம்
கோர்ட்டு அவமதிப்பு வழக்கில், தமிழக அரசின் உத்தரவு சரியா? தவறா? என்பது குறித்து விவாதிக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டில் அட்வகேட் ஜெனரல் வாதிட்டார்.
சென்னை,
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் அமுதா. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள கோர்ட்டு அவமதிப்பு வழக்கில், ‘என்னுடைய மகன் செந்தில் கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்று 1999-ம் ஆண்டு முதல் சேலம் சிறையில் உள்ளார். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தண்டனை கைதிகள் பலரை விடுதலை செய்த தமிழக அரசு, என்னுடைய மகனை மட்டும் முன்கூட்டியே விடுதலை செய்யவில்லை.
இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, என் மகனை முன்கூட்டியே விடுதலை செய்யவேண்டும் என்ற எனது கோரிக்கையை 6 மாதங்களுக்குள் பரிசீலிக்கவேண்டும் என்று உத்தரவிட்டது.
ஆனால், 6 மாதங்கள் கடந்தும் என் கோரிக்கையை அரசு பரிசீலிக்கவில்லை. எனவே, ஐகோர்ட்டு உத்தரவை அமல்படுத்தாத அரசு அதிகாரிகள் மீது கோர்ட்டு அவமதிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.
வெவ்வேறு நிலைப்பாடு
இந்த வழக்கில் நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர், ‘தர்மபுரி பஸ் எரிப்பு குற்றவாளிகளை தமிழக அரசு முன்கூட்டியே விடுதலை செய்துள்ளது மனுதாரர் மகன் விவகாரத்தில் மற்றொரு நிலைப்பாட்டை அரசு எடுத்துள்ளது ஒவ்வொரு வழக்கில் வெவ்வேறு நிலைப்பாட்டை அரசு ஏன் எடுக்கிறது?’ என்று நேற்று முன்தினம் கேள்வி எழுப்பி இருந்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
விவாதிக்க முடியாது
அப்போது அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, ‘மனுதாரரின் மகனை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என்று தமிழக உள்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்து விட்டார். ஐகோர்ட்டு நிர்ணயித்த காலக்கட்டத்துக்குள் அவர் தகுந்த உத்தரவை பிறப்பித்து விட்டார். தற்போது கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தொடர்ந்து, உள்துறை செயலாளரின் உத்தரவு சரியா?, தவறா? என்று விவாதிக்க முடியாது. வேண்டுமானால், அந்த உத்தரவை எதிர்த்து மனுதாரர் தனி வழக்காகத்தான் தொடர முடியும்’ என்று வாதிட்டார்.
இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story