தமிழக சட்டப்பேரவையை முடித்து வைப்பதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவையை முடித்து வைப்பதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக சட்டப்பேரவையில் நடப்பு ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. பிப்ரவரி 11 ஆம் தேதியில் இருந்து 13 ஆம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடத்தப்பட்டு, அதன் பின்னர் தேதி குறிப்பிடப்படாமல் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் காரணமாக, துறை வாரியான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறாமல் இருந்தது.
கடந்த ஜூன் மாதம் மீண்டும் சட்டப்பேரவை கூடியது. அதில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடத்தி, துறைரீதியான நிதி ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதனை தொடர்ந்து சபாநாயகர் தனபால் தேதி குறிப்பிடாமல் அவையை ஒத்தி வைத்தார்.
ஜூன் 28ம் தேதி தொடங்கிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூலை 20ம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட கூட்டத்தொடரை முடித்து வைப்பதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தற்போது அறிவித்துள்ளார்.
வேலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலையொட்டி பேரவை கூட்டம் முன்கூட்டியே முடித்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story