இரட்டை கொலையை ஐகோர்ட்டு விசாரணை: நீர்நிலைகளை பாதுகாப்பதில் அதிகாரிகள் மெத்தனம் - நீதிபதிகள் கண்டனம்


இரட்டை கொலையை ஐகோர்ட்டு விசாரணை: நீர்நிலைகளை பாதுகாப்பதில் அதிகாரிகள் மெத்தனம் - நீதிபதிகள் கண்டனம்
x
தினத்தந்தி 3 Aug 2019 4:30 AM IST (Updated: 3 Aug 2019 3:59 AM IST)
t-max-icont-min-icon

ஏரி ஆக்கிரமிப்பு குறித்து தகவல் அளித்த தந்தை-மகன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து மதுரை ஐகோர்ட்டு விசாரணை நடத்துகிறது.

மதுரை,

இதுதொடர்பான உத்தரவில் நீர்நிலைகளை பாதுகாப்பதில் மெத்தனமாக நடந்துகொள்வதாக அதிகாரிகளுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் மதுரை ஐகோர்ட்டு பதிவாளர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா முதலைப்பட்டியைச் சேர்ந்தவர் வீரமலை என்ற ராமர். கோவில் பூசாரி. அவருடைய மனைவி தாமரை. இவர்களுக்கு நல்லதம்பி என்ற மகனும், திருமணமாகாத 2 மகள்களும் உள்ளனர். நல்லதம்பிக்கு திருமணமாகி தமிழரசி என்ற மனைவியும், ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

முதலைப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான 196 ஏக்கர் பரப்பளவு கொண்டதாக ‘முதலைப்பட்டி ஏரி’ இருந்தது. இந்த ஏரியின் 157 ஏக்கர் பரப்பளவை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆக்கிரமிப்பாளர்கள் சிலர், பட்டா போட்டுள்ளனர்.

தற்போது அந்த ஏரியில் மீதம் உள்ள 39 ஏக்கர் நிலத்தையும் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வந்துள்ளனர். இந்தநிலையில் அங்கு நீர்நிலை ஆக்கிரமிப்புகளை மீட்க வேண்டும் என்று வக்கீல் ஒருவர், மதுரை ஐகோர்ட்டில் கடந்த 2016-ம் ஆண்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஏரியின் ஆக்கிரமிப்பை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனாலும் அதில் அதிகாரிகள் மெத்தனம் காட்டியதால், கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது அவமதிப்பு வழக்கை வக்கீல் தொடர்ந்தார். இந்த வழக்கு வீரமலை, அவருடைய மகன் நல்லதம்பி ஆகியோர் அளித்த தகவலால்தான் தொடுக்கப்பட்டதாக நினைத்து அவர்கள் மீது ஆக்கிரமிப்பாளர்கள் ஆத்திரத்தில் இருந்துள்ளனர்.

இந்தநிலையில் கடந்த வாரம் கோர்ட்டு உத்தரவின்படி தோகைமலை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் வருவாய் அதிகாரிகள் சென்று முதலைப்பட்டி ஏரியை ஆய்வு செய்துள்ளனர். அப்போது வீரமலை, அவருடைய மகன் நல்லதம்பி ஆகிய இருவரும் ஆக்கிரமிப்பு இடத்தின் எல்லைப்பகுதிகளை அதிகாரிகளிடம் அடையாளம் காட்டி உள்ளனர்.

இது ஆக்கிரமிப்பாளர்களின் ஆத்திரத்தை அதிகப்படுத்தி உள்ளது. எனவே பழிவாங்க திட்டம் தீட்டினர். அதன்படி, கடந்த 29-ந்தேதி காலையில் நல்லதம்பி தனது தோட்டத்தில் பறித்த பூக்களை திருச்சி மார்க்கெட்டில் சென்று விற்பனை செய்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது முதலைப்பட்டி அருகே ஒரு கும்பல் அவரை வழிமறித்து, அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே நல்லதம்பி உயிரிழந்தார். அந்த கும்பல் அவரின் வீட்டுக்கு சென்று வீரமலையையும் வெட்டிக் கொன்றனர். அவருடன் இருந்த பேரன் பொன்னாரையும் கொலை செய்ய முயன்றபோது அவர் அங்கிருந்து ஓடி உயிர் தப்பியுள்ளார். இந்த தகவல்கள் பத்திரிகைகளில் இடம் பெற்றுள்ளன.

பொதுநல வழக்கிற்கு உதவியதற்காக அவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்டு உள்ளனர். எனவே இந்த வழக்கை இந்த கோர்ட்டு தானாக முன்வந்து விசாரிக்கிறது.

நடந்த சம்பவத்தை கருத்தில் கொண்டு, கொலையாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கொலையாளிகளை அடையாளம் தெரிந்த சிறுவன் பொன்னாரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலையும், உரிய இழப்பீடும் வழங்க உத்தரவிட வேண்டும். மேலும், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, “இந்த இரட்டை கொலை வழக்கு தொடர்பாக 7 பேர் சரண் அடைந்துள்ளனர். ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சிலருக்கு தொடர்புள்ளதா? எனவும் விசாரணை நடைபெற்று வருகிறது. முதற்கட்ட வழக்கு விசாரணையை கரூர் போலீஸ் சூப்பிரண்டு கண்காணிப்பின் கீழ் குளித்தலை துணை சூப்பிரண்டு மேற்கொண்டுள்ளார்” என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக பல உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. சென்னை ஐகோர்ட்டிலும், மதுரை ஐகோர்ட்டிலும் நீர்நிலை ஆக்கிரமிப்பு குறித்த வழக்குகள் ஏராளமானவை தாக்கல் செய்யப்படுகின்றன. இவற்றை விசாரிக்கவே இந்த கோர்ட்டுகள் பெரும்பாலான நேரத்தை செலவிடுகின்றன. குளங்களை பாதுகாப்பது தொடர்பான சட்டம், நில ஆக்கிரமிப்பு தடுப்பு சட்டங்களின்படி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது குறைவு என தோன்றுகிறது.

பல இடங்களில் இதுபோன்ற நடவடிக்கைகளை யார் எடுப்பது என்பதிலும் குழப்பம் நிலவுகிறது. இதனால்தான் சம்பந்தப்பட்டவர்கள் பலர் கோர்ட்டில் வழக்கு தொடருகின்றனர். அதுபோல தான் இந்த வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதலைப்பட்டி ஏரியை ஆக்கிரமிப்பு செய்த பலருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.

அந்த ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவிலை இடிக்கும்படியும் வழக்கு தொடர்ந்ததால் கூட இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம். ஆக்கிரமிப்பு என்பதை அடிப்படை உரிமையாக பலர் நினைக்கிறார்கள். இதற்கும் அதிகாரிகள் தான் காரணம். அதிகாரிகளின் மெத்தன போக்கே, நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு முக்கிய காரணம்.

இந்த ஏரி ஆக்கிரமிப்பு தொடர்பான அவமதிப்பு வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டதால் கடந்த டிசம்பர் மாதம் வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இதுவரை அதிகாரிகள் பதில் அளிக்கவில்லை. இதுபோன்ற தாமதத்தினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தண்டிக்கலாம் என்பதை அவர்களுக்கு ஞாபகப்படுத்துகிறோம்.

இந்த வழக்கில் முதலைப்பட்டி ஏரியின் அசல் பரப்பளவு எவ்வளவு, அதன் பரப்பளவு குறைந்ததற்கான காரணம் என்ன, அங்கு பொது ஆக்கிரமிப்பு எவ்வளவு உள்ளது, தற்போதைய ஆக்கிரமிப்பாளர்கள் எத்தனை பேர், ஏரியை மீட்கவும், ஆக்கிரமிப்பை தடுக்கவும் எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன? என்பது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் வருகிற 14-ந்தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

அதேபோல 2 பேர் கொலை சம்பவம் குறித்த விசாரணையில் தற்போதை நிலை என்ன? என்று கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

Next Story