தீரன் சின்னமலையின் 214-வது நினைவு நாள்: முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மரியாதை
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 214-வது நினைவு நாளையொட்டி, கிண்டியில் உள்ள சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
சென்னை,
தீரன் சின்னமலை மறைந்த ஆடி பதினெட்டாம் நாள், அவரது நினைவுநாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
சென்னை கிண்டியில், தீரன் சின்னமலை சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதேபோல், ஈரோடு அடுத்த அரச்சலூர் ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் தமிழக அரசு சார்பில் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
சேலம் மாவட்டம் சங்ககிரி மலைக்கோட்டையில், தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட இடத்தில், அவரின் திருவுருவப் படத்திற்கு தமிழக அரசு சார்பில் மின்துறை அமைச்சர் தங்கமணி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நாமக்கல் தொகுதி எம்.பி. சின்ராஜ், மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தீரன் சின்னமலை மணிமண்டபத்தில், நினைவு சின்னத்திற்கு அமைச்சர் தங்கமணி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்களும் மரியாதை செலுத்தினர்.
ஈரோடு மாவட்டத்தில் காங்கயம் வட்டம் சென்னிமலை அருகிலுள்ள செ.மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் ஏப்ரல் 17, 1756 அன்று பிறந்தவர், தீரன் சின்னமலை. இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர். இளம் வயதிலேயே போர்ப் பயிற்சிகளை கற்றுத் தேர்ந்தவர். மைசூர் மன்னர் ஆட்சியில் கொங்கு நாடு இருந்ததால் வரிப்பணம், சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்கு எடுத்துச் செல்லப்படும். ஒருநாள், தனது நண்பர்களுடன் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி, அவ்வரிப்பணத்தைப் பிடுங்கி, ஏழை எளிய மக்களுக்கு விநியோகித்தார்.
“சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாக மைசூர் மன்னர் ஹைதரலியிடம் சொல்” என்று சொல்லி அனுப்பினார். அன்று முதல், அவர் "தீரன் சின்னமலை" என்று அழைக்கப்பட்டார். இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று சின்னமலை விரும்பினார். இதற்காக பிரிட்டிஷாரை எதிர்த்துக் கடும் போர் புரிந்து வந்த திப்பு சுல்தானுடன் கைகோர்த்தார். ஆயிரக்கணக்கான இளைஞர்களைத் திரட்டி மைசூர் சென்ற சின்னமலையின் கொங்குப்படை சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போர்களில் திப்புவின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது.
நான்காம் மைசூர் போரில் திப்பு சுல்தான் போர்க்களத்தில் வீரமரணம் எய்திய பின் சின்னமலை, கொங்கு நாடு வந்து அறச்சலூர் அருகே ஓடாநிலைக் கோட்டை கட்டிப் போருக்குத் தயார் ஆனார் . 1801-இல் ஈரோடு காவிரிக்கரையிலும், 1802-இல் ஓடாநிலையிலும், 1804-இல் அறச்சலூரிலும் ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார். போரில் சின்னமலையை வெல்ல முடியாது என்று கண்ட ஆங்கிலேயர் சூழ்ச்சி மூலம், சின்னமலையைக் கைது செய்து சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்று போலி விசாரணை நடத்தி, 1805ஆம் ஆண்டு ஆடிப்பெருக்கன்று தூக்கிலிட்டனர்.
Related Tags :
Next Story