ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் தொடங்கியது
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் வெகுவிமரிசையுடன் தொடங்கியது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது. இங்கு ஆடிப்பூர திருவிழா கடந்த 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 12 நாட்கள் நடை பெறும் இந்த திருவிழாவில் தினமும் ஆண்டாள்-ரெங்கமன்னார் வீதி உலா நடைபெற்று வருகிறது.
திருவிழாவையொட்டி கோவில் முன்பு பிரமாண்ட பந்தல் அமைத்து அதில் நாட்டிய நிகழ்ச்சி, ஆன்மீக சொற்பொழிவு நடக்கிறது. ஆடிப்பூர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை வெகுவிமரிசையுடன் தொடங்கியது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அவர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து ஆண்டாள், ரங்கமன்னார் அருளை பெற்று சென்றனர். தேரில் 7 வடங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதில் 2 வடங்கள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, எம்.எல்.ஏ.க்கள் சந்திரபிரபா, ராஜவர்மன், கலெக்டர் சிவஞானம், போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
இதனை தொடர்ந்து தேரில் இணைக்கப்பட்டிருந்த 7 வடங்களை ஆண், பெண் பக்தர்கள் கோவிந்தா! கோபாலா! கோஷத்துடன் பக்தி பரவசத்துடன் இழுத்தனர்.
தேர்த்திருவிழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் 1,500க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். பக்தர்களுக்கு தேவையான நடமாடும் கழிவறை, குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் செய்துள்ளனர். பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
Related Tags :
Next Story