அத்திவரதர் தரிசன நேரம் நீட்டிக்கப்படும் - மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவிப்பு


அத்திவரதர் தரிசன நேரம் நீட்டிக்கப்படும் -  மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவிப்பு
x
தினத்தந்தி 4 Aug 2019 7:33 PM IST (Updated: 4 Aug 2019 7:33 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவம் பக்தர்களின் வசதிக்காக தரிசன நேரம் நீட்டிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார்.

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் உற்சவம்  நடைபெற்று வருகிறது. 31 நாட்கள் சயன கோலத்தில் காட்சியளித்த அத்திவரதர் கடந்த 1 ந்தேதி முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். 35-வது நாளான இன்று நின்ற கோலத்தில் காட்சி அளிக்கும் அத்திவரதருக்கு வெந்தய கலர் பட்டு உடுத்தி, மல்லிகை, ரோஜா, துளசி, மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. 

அருள் பாலிக்கும் அத்திவரதரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நள்ளிரவு முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டு வருகின்றனர். இன்று விடுமுறை நாள் என்பதால் அத்திவரதரை தரிசிக்க கூட்டம் அலைமோதி வருகிறது. 

இந்நிலையில்  மாவட்ட ஆட்சியர் பொன்னையா செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

அத்திவரதர் வைபவத்தில் பக்தர்களின் தரிசனம் முடியும்வரை இன்று கோயில் நடை மூடப்படாது. நன்கொடை அளிப்பவர்களுக்கு 5 டோனர் பாஸ் வழங்கப்படும் என்பது வதந்தி.  

காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவம் பக்தர்களின் வசதிக்காக தரிசன நேரம் நீட்டிக்கப்படும்.  பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால், அத்திவரதர் தரிசன நேரம் நள்ளிரவு ஒரு மணி வரை நீட்டிக்கப்படும். 

அத்திவரதர் வைபவத்தில் இதுவரை 44.50 லட்சத்திற்கும் அதிகமானோர் தரிசனம் செய்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story