காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து: தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்


காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து: தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்
x
தினத்தந்தி 6 Aug 2019 4:17 AM IST (Updated: 6 Aug 2019 4:17 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சென்னை,

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா மூலம் காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:-

மாநிலங்களவையில் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து தரும் அரசமைப்புச் சட்டம் 370-ஐ ரத்து செய்கிற மசோதாவை பா.ஜ.க. அரசு தாக்கல் செய்து, நிறைவேற்றியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. இன்றைக்கு அந்த பிரிவை ரத்து செய்திருப்பதன் மூலம் ஜனநாயகப் படுகொலையை பா.ஜ.க. செய்திருக்கிறது.

இந்திய ஜனநாயக வரலாற்றில் இன்று ஒரு கருப்பு நாள். அரசமைப்புச் சட்டம் பகிரங்கமாக படுகொலை செய்யப்பட்ட நாள்.

பா.ஜ.க.வின் இத்தகைய ஜனநாயக விரோதச் செயலை மாநிலங்களவையில் அ.தி.மு.க. ஆதரித்திருப்பது வெட்கக் கேடானது.

கே.பாலகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:-

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக்கூடிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை ரத்து செய்துள்ளது, காஷ்மீர் மக்களின் மாநில உரிமையை அபகரிப்பதாகும். இது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானதாகும். மத்திய அரசு அதிகார மமதையில் நடத்தியுள்ள ஜனநாயக படுகொலையாகும்.

முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன்:-

ஜம்மு காஷ்மீரில் பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையில், அரசியல் தீர்வு காண வழி முறைகள் உருவாக்கப்படாமல், அரசியல் அமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவை ரத்து செய்து, மாநிலத்தை பிரித்திருப்பது நாட்டின் ஒற்றுமை மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும்.

டி.டி.வி.தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்:-

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 மற்றும் 35ஏ ஆகிய சட்டப்பிரிவுகள் நீக்கப்பட்டதை, மக்களிடம் கருத்து வாக்கெடுப்பு நடத்தி மத்திய அரசு முடிவு செய்திருக்க வேண்டும்.

அரசின் இந்த நடவடிக்கை ஏற்கனவே பதற்ற பூமியாக இருக்கும் காஷ்மீர் பகுதியில் தீவிரவாதத்துக்கு மேலும் தீனிபோடும் வகையில் அமைந்து, நிலையற்ற சூழல் உருவாவதற்கே வழிவகுக்கும்.

கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்:-

370 மற்றும் 35 ஏ ஆகிய சட்டப் பிரிவுகளை நீக்கிய விதம் ஜனநாயகத்தின் மீது நடைபெற்ற மிகப்பெரிய தாக்குதல். இதுபோன்ற முக்கியமான முடிவுகள் மீது நாடாளுமன்றத்தில் நடைபெற்றிருக்க வேண்டிய எவ்வித விவாதத்தையும் மேற்கொள்ளாமல், தங்களுக்கு அவையில் இருக்கின்ற பெரும்பான்மை ஒன்றினை மட்டும் கருத்தில் கொண்டு மத்திய அரசு இம்முடிவினை எடுத்திருக்கின்றது.

இந்த சட்டப் பிரிவுகள் சட்டப்பூர்வமாக நீக்கப்படுவது குறித்து தனியாக விவாதம் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஜனநாயகத்தில் எதிர்க்குரல்களை முடக்கும் இந்த அரசின் ஆதிக்கப்போக்கினை மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டிக்கிறது.

சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்:-

ஜம்மு காஷ்மீர், லடாக்கைப் இரண்டாகப் பிளந்து பிரித்து ஜம்மு காஷ்மீரைச் சட்டமன்றத்துடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதியினைச் சட்டமன்ற அங்கீகாரமில்லாத யூனியன் பிரதேசமாகவும் மாற்ற முனைந்திருப்பது மிகப்பெரும் அநீதி. இதனை நாம் தமிழர் கட்சி வன்மையாக எதிர்க்கிறது, கண்டிக்கிறது.

ஜவாஹிருல்லா

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா:-

ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்ட இந்த நாள் நமது நாட்டின் ஜனநாயகத்தின் கருப்பு நாளாகும். ஜனநாயக விழுமியங்கள் நிறைந்த நமது நாட்டில் ஜனநாயகத்தைப் படுகுழியில் வீழ்த்தும் மோடி அரசின் இந்த ஜனநாயக படுகொலைக்கு எதிராக வீறுகொண்டு எழுந்து அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து களம் காண வேண்டும்.

கே.எம்.காதர் மொகிதீன்

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன்:-

பா.ஜனதா ஆட்சியில் இந்த நாள் துயரமும், வேதனையும் நிறைந்த கருப்பு தினமாகும். நல்லநாள் எனப் பேசிவரும் பிரதமர் நரேந்திர மோடி, மாநில உரிமைகளுக்கும், கூட்டு கலாசாரத்துக்கும் கெட்ட நாளை தந்திருக்கிறார்.

யூனியன் பிரதேசங்கள் எல்லாம் மாநில அந்தஸ்து கோரும் நேரத்தில் காஷ்மீரும், ஜம்முவும் யூனியன் பிரதேசங்கள் ஆக்கப்படுகின்றன என்றால் இது ஜனநாயக படுகொலை இல்லையா?

இதேபோல், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் எம்.ஜி.கே.நிஜாமுதீன், தமிழ் தேசியப் பேரியக்க தலைவர் பெ.மணியரசன், தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, தமிழ் மாநில தேசிய லீக் தலைமை நிலைய செயலாளர் ஜி.சம்சுதீன், முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழக மாநில பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Next Story