வாகன பெருக்கத்துக்கு ஏற்ப பெட்ரோல் விற்பனை நிலையங்களை அதிகரிப்பது அரசின் கொள்கை முடிவு மதுரை ஐகோர்ட்டில், எண்ணெய் நிறுவனங்கள் தகவல்


வாகன பெருக்கத்துக்கு ஏற்ப பெட்ரோல் விற்பனை நிலையங்களை அதிகரிப்பது அரசின் கொள்கை முடிவு மதுரை ஐகோர்ட்டில், எண்ணெய் நிறுவனங்கள் தகவல்
x
தினத்தந்தி 6 Aug 2019 4:22 AM IST (Updated: 6 Aug 2019 11:04 AM IST)
t-max-icont-min-icon

வாகன பெருக்கத்துக்கு ஏற்ப பெட்ரோல் விற்பனை நிலையங்களை அதிகரிப்பது அரசின் கொள்கை முடிவு என்று மதுரை ஐகோர்ட்டில், அரசு எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மதுரை,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த வெங்கிடுசாமி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழகத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாத நிலவரப்படி, தனியார் ‘பங்க்’கள் உள்பட மொத்தம் 5 ஆயிரத்து 388 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் செயல்படுகின்றன. இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம், தமிழக ஊரக பகுதிகளில் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் தொடங்குவதற்கான டெண்டர் அறிவிப்பை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் நிறுவனம், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் வெளியிடப்பட்டது.

குறைந்த இடைவெளியில் 5 ஆயிரத்து 125 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் தொடங்குவதற்கான இந்த முடிவு, அரசியல் அழுத்தத்தின் காரணமாகவும், முறையாக ஆய்வு செய்யப்படாமலும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு சுற்றுச்சூழலையும், பொதுநலனையும் பாதிக்கும். பெட்ரோல் பங்கிற்கு தடையில்லா சான்று அளிப்பது பற்றிய பல்வேறு வழிகாட்டுதல்களை மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சகம் அளித்துள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் தொடங்க தடையில்லா சான்றுகளை மாவட்ட நிர்வாகங்கள் அளிக்கின்றன.

இடைக்கால தடை

பெட்ரோல் விற்பனை நிலையங்கள் கழிவுகளை பொது கால்வாய்களில் கலக்க செய்வதை மாவட்ட நிர்வாகம் கவனிப்பதில்லை. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் தேவையை கணக்கிட்டு, விற்பனை நிலையங்கள் தொடங்க அனுமதிக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யப்படவில்லை.

பெட்ரோலுக்கு மாற்று எரிபொருள் கொள்கையை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தநிலையில் பெட்ரோல் விற்பனை நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையிலான அறிவிப்பு ஏற்கத்தக்கதல்ல. எனவே இதுதொடர்பான டெண்டர் அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும். பெட்ரோல் விற்பனை நிலையங்களை இரட்டிப்பாக்குவதால் ஏற்படும் தீமை பற்றி ஆய்வு செய்ய நிபுணர் குழுவை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, புதிதாக பெட்ரோல் விற்பனை நிலையங்கள் தொடங்குவதற்கான டெண்டர் அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு இருந்தது.

அரசின் கொள்கை முடிவு

இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் ரவிச்சந்திரபாபு, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது பெட்ரோலிய எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘நாளுக்கு நாள் வாகன பெருக்கம் அதிகரிக்கின்றன. எனவே பெட்ரோல் விற்பனை நிலையங்களும் அதிக அளவில் தேவைப்படுகின்றன. இது குறித்த முடிவுகள் அனைத்தும் அரசின் கொள்கை முடிவு. இதில் கோர்ட்டு தலையிட முடியாது. விதிகளை பின்பற்றி பெட்ரோல் விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும்” என்று கூறப்பட்டு இருந்தது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை வருகிற 21-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story