‘மழைநீர் சேகரிப்பை ஒரு சவாலாக எடுத்து செய்வோம்’ அமைச்சர் எஸ்.பி.வேலுமணி டுவிட்டர் வீடியோ பதிவு
மழைநீர் சேகரிப்பை ஒரு சவாலாக எடுத்து செய்வோம் என்றும், ஒரு துளி மழைநீரும் இனி வீணாகக்கூடாது என்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி டுவிட்டர் வீடியோ பதிவில் தெரிவித்தார்.
சென்னை,
தமிழகத்தில் கடந்த 2001-ம் ஆண்டு அப்போது முதல்-அமைச்சராக இருந்த மறைந்த ஜெயலலிதா, மழைநீர் சேர்கரிப்பு திட்டத்தை அறிவித்தார். அது வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. போதிய அளவு பருவமழை பெய்யாததால், இந்த ஆண்டு கடும் வறட்சியை தமிழகம் சந்தித்தது. பல இடங்களில் நிலத்தடி நீரும் பெருமளவில் குறைந்துவிட்டது.
வீடுகளில் மழைநீர் சேகரிப்பை சரியாக செயல்படுத்தி இருந்தால் நிலத்தடி நீர் பிரச்சினை வந்து இருக்காது என்று பல வல்லுநர்கள் தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனிப்பட்ட முறையில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை வீட்டுக்கு வீடு நடைமுறைப்படுத்த டிஜிட்டல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
அதில், வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே பொதுமக்கள் அவரவர் வீடுகளில் மழைநீர் சேகரிப்பை உருவாக்க வேண்டும் என்று குறிப்பிட்டு வந்தார்.
சவாலாக செய்ய வேண்டும்
இந்த நிலையில் மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்தும், அதை ஒரு சவாலாக செய்ய வேண்டும் என்ற கருத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தன்னுடைய டுவிட்டரில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
இறைவன் கொடுத்த கொடையான மழைநீரை சேமிப்பது அவசியம். ஜெயலலிதா அரசை வழிநடத்தி செல்லும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தி இருக்கிறார். 200 சதுர அடி கொண்ட ஒரு வீட்டில் முறையாக மழைநீரை சேமித்தால், வருடத்துக்கு தேவையான நீர் ஒரு குடும்பத்துக்கு கிடைக்கும்.
தமிழ்நாட்டு மக்கள் அவரவர் வீட்டில் மழைநீரை சேமிக்க வேண்டும். இனி பெய்கின்ற ஒரு துளி மழைநீர் கூட வீணாகக்கூடாது. இதை ஒரு சவாலாக எடுத்து செய்ய வேண்டும். மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர்களும், மக்கள் மீது அக்கறை உள்ளவர்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை உணர்த்த வேண்டும். நமக்காக, நாட்டுக்காக, நாளைக்காக மழைநீரை சேமிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜக்கி வாசுதேவுக்கு அழைப்பு
அதுமட்டுமில்லாமல், அவருடைய டுவிட்டர் பதிவில் ‘நதிகளை மீட்போம், காவிரி கூக்குரல் போன்று மக்களின் மேல் அக்கறைக்கொண்டு நீர்வளம் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்து வரும் சத்குரு ஜக்கி வாசுதேவ், மழைநீர் சேகரிப்பு சவாலில் பங்கெடுத்து, அதன் அவசியத்தை உணர்த்த வேண்டும்’ என்றும் கூறியிருக்கிறார்.
Related Tags :
Next Story