இன்று தேசிய கைத்தறி தினம்: கைத்தறி ஆடைகளை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
நெசவாளர்களின் வாழ்க்கைத்தரம் உயர கைத்தறி ஆடைகளை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
தேசிய கைத்தறி தினம் இன்று (ஆகஸ்டு-7) கடைப்பிடிக்கப்படுகிறது. கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கைத்தரம் உயர பொதுமக்கள் கைத்தறி துணிகளை அணிய வேண்டும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
இதுகுறித்து தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேசிய கைத்தறி தினம்
இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த சுதேசி இயக்கம் 1905-ம் ஆண்டு ஆகஸ்டு 7-ந் தேதி தொடங்கப்பட்டது. உள்நாட்டுப் பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தை நினைவுகூரும் வகையிலும், கைத்தறி நெசவாளர்களை சிறப்பிக்கும் வகையிலும் 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 7-ந் தேதி தேசிய கைத்தறி தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
நாட்டின் பொருளாதார செயல்பாட்டில் விவசாயத்திற்கு அடுத்து மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பினை வழங்கும் தொழிலாக கைத்தறி தொழில் விளங்கி வருகிறது. தமிழ்நாட்டின் கைத்தறி பிரிவு, ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்று சிறப்புமிக்கதும், நெசவாளர்களின் மிகச்சிறந்த கைத்திறனுக்கான பாரம்பரியத்தையும் கொண்டது. தமிழ்நாட்டில் தற்போது 1,137 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் கீழ் 2.51 லட்சம் கைத்தறிகள் இயங்கி வருகின்றன.
நெசவாளர்கள் வாழ்வு வளம்பெற...
கைத்தறி துறையை மேம்படுத்தவும், நெசவாளர்கள் வாழ்வு வளம்பெறவும் ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் விலையில்லா வேட்டி-சேலை வழங்கும் திட்டம், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு ஆண்டுதோறும் 4 இணை விலையில்லா சீருடைகள் வழங்கும் திட்டம்,
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 15-ந் தேதி முதல் ஜனவரி 31-ந் தேதி வரை கைத்தறி துணிகள் விற்பனைக்கு 30 சதவீத தள்ளுபடி மானியம் வழங்கும் திட்டம், தமிழ்நாடு கூட்டுறவு கைத்தறி நெசவாளர் முதியோர் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதிய திட்டம், நெசவாளர்களுக்கு முதல்- அமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் வழங்கும் திட்டம், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு விலையில்லா மின்சாரம் வழங்கும் திட்டம், நெசவாளர் நல்வாழ்வு காப்பீடு திட்டம்,
‘கைத்தறி ஆதரவு திட்டம்’
தமிழ்நாடு கூட்டுறவு கைத்தறி நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம், டாக்டர் எம்.ஜி.ஆர். கைத்தறி நெசவாளர் நல்வாழ்வு அறக்கட்டளை கீழ் நெசவாளர்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம், கைத்தறி நெசவாளர்களுக்கான வட்டி மானியத் திட்டம், மாநில அளவில் சிறந்த நெசவாளர் விருது வழங்கும் திட்டம்,
திறன்மிகு கைத்தறி நெசவாளர்களுக்கு பரிசுகள் வழங்கும் திட்டம், கைத்தறி நெசவை லாபகரமான தொழிலாக்குதல், புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உற்பத்தியை அதிகப்படுத்துதல், புதிய வடிவமைப்பு திறன்களை மேம்படுத்துதல், கைத்தறி துணிகளை சந்தைப்படுத்துதல், கைத்தறி துணிகளை பிரபலப்படுத்துதல், பாரம்பரியமிக்க கைத்தறி நெசவை பாதுகாத்தல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் நிதியுதவி அளிக்க ‘கைத்தறி ஆதரவு திட்டம்’ போன்ற பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.
பொதுமக்களுக்கு வேண்டுகோள்
கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடும் வகையில், தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் கைத்தறி நெசவாளர்களின் புதிய தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட பட்டு மற்றும் பருத்தி கைத்தறி ரகங்களை அதிகளவில் வாங்கி பயன்படுத்திட வேண்டும்.
தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள கைத்தறி நெசவாளர்கள் மற்றும் இத்தொழில் சார்ந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதோடு, ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, கைத்தறி நெசவாளர்களுக்கென செயல்படுத்தி வரும் திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்தி தங்களது வாழ்வில் வளம்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story