முதலாமாண்டு நினைவு நாள்: கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின், வைகோ, அழகிரி அஞ்சலி
முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்திற்கு பேரணியாக வந்து மு.க.ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன், வைகோ, அழகிரி உள்பட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை
முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது முதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி எம்.பி மற்றும் முக்கிய நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.தொடர்ந்து கலைஞர் நினைவிட வளாகத்தில் மு.க.ஸ்டாலின் மரக்கன்று ஒன்றையும் நட்டு வைத்தார்.
முன்னாள் மத்திய அமைச்சரான மு.க.அழகிரி தனது குடும்பத்தினருடன் சென்னை கலைஞர் நினைவிடத்திற்கு வந்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதே போல் முதுபெரும் தலைவர் கலைஞரின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த ஏராளமான திமுகவினர் திரண்டுள்ளனர்.
நினைவிடத்தில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அஞ்சலி செலுத்தினார். இதைத் தொடர்ந்து கலை, இலக்கியம் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்தவர் கலைஞர் என்று அவர் கூறினார். மேலும் தி.மு.க.வை எஃக்கு கோட்டையாக வளர்த்து காப்பாற்றியவர் கலைஞர் என அவர் தெரிவித்தார்.
கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் கவிஞர் வைரமுத்து மறைந்தாலும் தனது தத்துவங்களால் வாழ்ந்து கொண்டிருப்பார் கருணாநிதி என கூறினார்.
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அண்ணாசாலையில் உள்ள அண்ணாசிலை அருகே திமுக சார்பில் அமைதி பேரணி தொடங்கியது.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் இன்று கலைஞரின் சிலையை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி திறந்து வைக்கிறார். இதிலும், இதனைத் தொடர்ந்து ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பல்வேறு தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். பேரணியில், திமுக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
Related Tags :
Next Story